குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது. சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள். இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன.
மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்கள்: 1. மூலாதாரம், 2. சுவாதிஷ்டானம், 3. மணிப்பூரகம், 4. அனாகதம், 5. விசுக்தி, 6. ஆக்கினை, 7. துரியம்.