கங்கையில் நீராடினால் பாவங்கள் நீங்கி புனித மடையலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பெருமைகள் பல பெற்ற கங்கை நதிக்கு நன்றிக் கடனாக நாள்தோறும் மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே ‘கங்கா ஆரத்தி’ ஆகும். இந்த மாபெரும் பூஜை திறந்த வெளியில் கங்கைக் கரையில் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த பூஜையைக் காணவும், தரிசனம் செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதிக்கரையில் கூடுவது வழக்கம்.
ஒரே நேரத்தில், ஒரே மாதிரி வெண்ணிற ஆடை அணிந்த பத்து பூசாரிகளால் இந்தப் பூஜை செய்யப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக பத்து உயர்ந்த மேடைகளின் மேல் நின்று பூசாரிகள் நிதானமாக தூபம், தீபம், அலங்கார தீபம், புஷ்பம், சாமரம் போன்ற நானாவித உபசாரங்களுடன் ‘கங்கா மாதா’ வுக்கு சிறப்பாகப் பூஜை செய்கிறார்கள். புனித கங்கை நதிக்கரையில் ஆரத்தி பாட்டு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.