நாகங்களை பற்றி பல புராண கதைகள், கர்ண பரம்பரை கதைகள், அனுபவ உண்மைகள் என ஏராளம் உள்ளது. நாகம் ஆலய வழிபாடுகளில் முக்கிய இடத்தை பெறுகிறது.
அம்மன் கோயில்களில் அரச மரம், வேப்ப மரம் இணைந்து இருக்க அங்கே பாம்பு புற்று வழிபாடு பிரசித்தமாகும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாம்பு புற்றுக்கு சந்தனம், மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்து, அனந்தன், வாசுகி, கிஷ்காலன், அப்ஜன், மகரி, கங்குபாலன், கார்கோடன், குளிகன், பத்மன் ஆகிய நாக தேவர்களின் பெயர்களை உச்சரித்து புற்றுக்கு பால், முட்டை ஊற்றி வழிபடுவர். பல கோயில்களில் அம்மன்கள் நாக அம்சமாகவே அருள்பாலிக்கின்றனர்.
நாகாத்தம்மன், முப்பாத்தம்மன், காளியம்மன், மாரியம்மன் என ஒவ்வொரு ஊரிலும் பல விசேஷ பெயர்களில் வீற்றிருக்கிறாள் சக்தி. திருவேற்காட்டில் தேவி கருமாரி அம்மன், நாக சக்தியாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். இத்தலத்தில் மிகப் பெரிய புற்றுக் கோயில் உள்ளது.
ஜோதிட சாஸ்திரப்படி நாகங்கள் ராகு, கேது என்ற பெயரில் கிரகங்களாக பரிபாலனம் செய்கின்றன. ராகு, யோக போகங்களுக்கும் கேது மோட்சம், ஞானத்திற்கும் அதிபதியாக ஆதிக்கம் செலுத்துகின்றனர். மனித வாழ்வில் மிக முக்கிய அம்சமான திருமண விஷயத்திலும், குழந்தை பாக்யம் அருள்வதிலும் தோஷத்தை ஏற்படுத்துவது இந்த ராகு கேதுதான். நாக தோஷம், சர்ப்ப தோஷம் என பல வகைகளில் தோஷங்களை ஏற்படுத்துவதில் ராகு-கேதுவுக்கு நிகர் யாரும் இல்லை எனலாம். குழந்தை பிறக்கும்போது கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு பிறப்பது, கொடி சுற்றிக்கொண்டு பிறப்பது எல்லாம் ராகு-கேதுவின் வேலையாகும்.