பஞ்ச பூத இயக்கத்தை செயல்பாட்டை நமக்கு சாதகமாக, சுலபமாக மாற்றிட, அனுபவித்தில் வெற்றிபெற, செல்வம் பெருகிட சித்தர்கள் நமக்கு வழங்கிய அற்புதக்கலையே பஞ்சபட்சி சாஸ்திரம்.
பாரம்பரிய ஜோதிட முறைகளில் இதுவும் ஒன்று. இது, ஐந்து வகையான பட்சிகள், ஐந்து வகையான தொழில்கள், ஐந்து வகையான ஜாமங்கள் என்று பிரித்துப் பலன் கூறும் முறை ஆகும்.
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்று இந்த ஐந்து பறவைகளுக்கும் 27 நட்சத்திரங்களை பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பறவையும் அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று ஐந்து வகையான தொழில்களில் ஈடுபடும். அதேபோல ஒரு நாளைக்கு பகலில் ஐந்து ஜாமங்கள், இரவில் ஐந்து ஜாமங்கள் என்று கால அளவினை பிரித்திருக்கிறார்கள்.
இவற்றில் அரசு, ஊண் இரண்டும் உத்தம பலனையும், நடை மத்திம பலனையும், துயில், சாவு ஆகியன அதம பலனையும் குறிப்பதாகச் சொல்வர். இந்தத் தொழில்கள் வளர்பிறை நாட்களில் ஒருவிதமாகவும், தேய்பிறை நாட்களில் வேறுவிதமாகவும் காணப்படும்.