புரட்டாசி சனிக்கிழமை விரதத்தினை எவ்வாறு கடைப்பிடிப்பது...?

புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குல தெய்வத்தின் அருளைப் பெறலாம். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உகந்தது. அன்று விரதம் இருப்பது மிகவும் நல்லது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய பெருமாளை வேண்டி விரதம் இருப்பதால் சனிபகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரஹம் செய்கிறார்.
 
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் பஞ்சமுக குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
 
பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்ட நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். கலசம் வைத்து வழிபாடு செய்தால் பலன்கள் இரட்டிப்பாகும்.
 
சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம். புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசி மாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். 
 
சாளக்கிராம பூஜை வழக்கம் போல செய்து பின்னர் மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு பெருமாளின் அஷ்டோத்திரம் விஷ்ணு சஹஸ்ரநாமம் கோவிந்த நாமாவளி மஹா லஷ்மியின் கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்ய வேண்டும்.
 
பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, பவளமல்லி நந்தியாவட்டை தாமரை வில்வம் மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்