யோகம் தரும் குருப்பெயர்ச்சி 2024 சிறப்பு பலன்கள், பரிகாரங்கள்! – மீனம்!

Prasanth Karthick

சனி, 27 ஏப்ரல் 2024 (08:46 IST)
கடும்சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவனைக்கும் மீன ராசி அன்பர்களே எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் உங்கள் பொறுப்புகளை  நீங்கள் தட்டிக் கழிக்க மாட்டீர்கள். முடிந்தவரை அனைவருக்கும் நன்மைகள் செய்வதற்கு பாடுபடுவீர்கள்.


 
இந்த பெயர்ச்சியில் உங்கள் சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் பேச்சில் பொறுமையும் நிதானமும் இருக்கும். உற்றார், உறவினர்கள் நண்பர்களிடம் சுமுகமான உறவு தொடரும்.

உடல் உபாதைகள் நீங்கும்.  எதிர்பாராத புதிய பொறுப்புகள் தேடி வரும். இதனால் கூடுதல் வருமானமும் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் நேர்மையான நடத்தையை அனைவரும் பாராட்டுவார்கள். உங்களின் விவாதத் திறமை அதிகரிக்கும். முக்கியமான விவாதங்களில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை முறைப்படுத்தி, வகைப்படுத்தி செய்து காரியமாற்றுவீர்கள். விருப்பு, வெறுப்பின்றி அனைவருக்கும் உதவி செய்வீர்கள். நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் சாதனை புரிவீர்கள்.

புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் தேவைகள் எளிதாகப் பூர்த்தியாகும். நீங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதி மன்றத்திற்கு வெளியில் சமாதானமாக முடியும். உங்கள் மீது அபாண்டபழி சுமத்தியவர்கள் தவறுகளை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பார்கள். தெய்வ பலத்தால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

உடல் ஆரோக்யம் சிறப்பாக இருப்பதால் வெளியூறுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும்.

புதிய செயல்களுக்கு அஸ்திவாரம் போடுவீர்கள். உறவினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். இல்லத்தில் களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கை வந்து சேரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு உங்களுக்கு உந்துசக்தியாக அமையும்.

உங்கள் செயல்கள் இடையூறுகளின்றி சுலபமாக நிறைவேறும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உறுதியின்றி செய்த செயல்களில் ஒரு நிரந்தரப் பிடிப்பு ஏற்பட்டு மளமளவென்று நடக்கத் தொடங்கும். சில அனாவசியச் செயல்களுக்கு கைப்பொருள்களை இழந்த நிலை மாறும். மற்றபடி சகோதர, சகோதரிகளால் சில பிரச்னைகள் ஏற்படலாம். அவர்களுக்கு உதவி செய்ய நினைத்து சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடலாம். என்றாலும் அந்தப் பிரச்னைகள் தானாகவே விலகிவிடும். உங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அதிகரிக்கும் ஆண்டாக இது அமைகிறது.

உத்யோகஸ்தர்கள் தங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மதிப்பு மரியாதை உயரும்.

வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைப்பீர்கள். காலதாமதம் ஏற்பட்டாலும் உங்களின் செயல்கள் வெற்றி பெறும். ஆனால் நண்பர்கள், கூட்டாளிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்காது. ஆகையால் புதிய முதலீடுகளைத் தள்ளிப்போடவும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.


 
அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் சிறிது குறைபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமுடன் செயல்படவும். தொண்டர்களின் பாராமுகத்தால் கோபமடையாமல் கடமைகளைச் செய்து வரவும். பேச்சில் கண்ணியம் குறையாது கவனமாக இருக்கவும்.

கலைத்துறையினர் இந்த குருப் பெயர்ச்சியில் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். அதேசமயம் எதிர்பார்த்த புகழும், பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். போகப் போக உங்களுக்கு சாதகமற்ற நிலைமைகள் மாறிவிடும்.

பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சிகரமான ஆண்டு. புத்தாடை, அணிமணிகளை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பண வரவுக்கு எந்தக் குறைவும் இருக்காது. பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.

மாணவமணிகள் முனைப்புடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளில் பதற்றப்படாமல் ஈடுபடவும். அதேசமயம் உங்கள் முயற்சிகளுக்கு ஆசிரியர்களிடம் நல்ல பாராட்டு கிடைக்கும்.

பூரட்டாதி:
இந்த குருப் பெயர்ச்சியில் நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். அவர்களால் உதவிகள் பெறலாம். சுபநிகழ்ச்சிகளுக்கு  இப்போது திட்டமிடலாம். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம்.

உத்திரட்டாதி:
இந்த குருப் பெயர்ச்சியில் புதிய வீடு  கட்டுவதற்கான வேலைகளை இப்போது  தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம். விருந்து  விழா என உல்லாசமாக பயணம் மேற்கொள்வீர்கள். சந்தாணபாக்கியம் ஏற்படும்.

ரேவதி:
இந்த குருப் பெயர்ச்சியில் பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியைக் காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவார்கள்.

பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை  வணங்கவும். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை எளியோர்க்கு உதவவும். வியாழகிழமைதோறும் உங்களால் முடிந்த அளவு அருகம்புல்லை மாலையாகக் கட்டி விணாயகருக்கு சாத்தவும். முடிந்தவர்கள்  தேங்காய் மாலை சாத்தலாம்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு
அதிர்ஷ்ட கல்: புஷ்பராகம், பவழம்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீசிவன், ஸ்ரீகுரு, ஸ்ரீபைரவர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்