ஆண்டாளுக்குச் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் என்ற பெயர் எவ்வாறு உருவானது...?

ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஆண்டாள் குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட நாள்தான் ஆடிப்பூரம் என்று இன்றும் கொண்டாடப்படுகிறது.
சிறு குழந்தையான ஆண்டாளுக்குத் தினமும் கண்ணனின் கதைகளை சுவைபட கூறுவார் பெரியாழ்வார். அதைக் கேட்டு வளர்ந்த ஆண்டாள்,  எப்போதும் கண்ணனின் நினைவாகவே இருந்தாள்.
 
பெருமாளுக்கு தனது தந்தை தினமும் அணிவிக்கத் தொடுத்து வைத்திருக்கும் மாலையைத் தந்தைக்குத் தெரியாமல் தானே சூடிக்கொண்டு  அழகு பார்ப்பாள். அருகே உள்ள கிணற்றைக் கண்ணாடியாக நினைத்து அதில் தன் அழகைப் பார்த்து ரசிப்பாள். பின்னர் மாலையைக் கழற்றி  இருந்த இடத்தில் வைத்து விடுவாள். இந்த விபரம் எதுவும் தெரியாமல், அந்த மாலையைத் தான் பெருமாளுக்கு அணிவித்து வந்தார்  பெரியாழவார்.
 
ஒருநாள் வழக்கம் போல் பெருமாளுக்கு உரிய மாலையை அணிந்து அழகு பார்த்துவிட்டுக் கழற்றி வைக்கும்போது அதில் ஆண்டாளின்  தலைமுடி சிக்கிச் கொண்டது.
 
ஆண்டாள் இதை கவனிக்கவில்லை. ஆனால் பெரியாழ்வார் இதைக் கவனித்து விட்டார். அவர், அந்த மாலையைப் பெருமாளுக்குச் சாற்றாமல் வேறு ஒரு மாலையை அணிவித்தார். ஆனால் அன்றிரவே பெருமாள் கனவில் தோன்றி, முடி இருந்த மாலை உனது மகள் ஆண்டாள் சூடிய  மாலை. அவள் சூடிக் களைந்த மாலையை அணிவதே எனக்கு விருப்பம். இனி அவள் அணிந்த மாலைகளையே எனக்கு அணிவிக்க வேண்டும்  என்று அருளினார்.
 
இதனால் ஆண்டாளுக்குச் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் என சிறப்புப் பெயர் ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை ஆண்டாள் சூடிய மாலையே வடபத்ர சயன பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்