புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்களும் அதன் பலன்களும் !!

புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். இந்த புரட்டாசியில் வரும் விரதங்கள் குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் தெரிந்துக் கொள்வோம்.


ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் இருக்கும் விரதம் இது. இந்த விரத நாளில், அருகம்புல்லை கொண்டு சிவனையும், விநாயகரையும் வழிபட்டால் குடும்பம் செழிக்கும்.
 
மஹாலட்சுமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியை பிரார்த்தித்து இருக்கும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.
 
கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் உடைய பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. இவ்விரதம் சித்திகளை தரும்.

 
சித்தி விநாயக விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகருக்காக இருக்கும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டால்  காரிய சித்தி உண்டாகும்.
 
சஷ்டி - லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை நினைத்து கடைபிடிக்கப்படும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால்  பரமேஸ்வரி சர்வ மங்களங்களையும் அருள்வாள்.
 
அனந்த விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி அன்று கடைபிடிக்க வேண்டிய விரதம் இது. பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால், தீராத வினைகள் எல்லாம் தீரும். ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.
 
அமுக்தாபரண விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரின் அருள் கிடைக்க இருக்கும் விரதம் இது. இவ்விரத வழிபாட்டால் சந்ததி செழிக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.
 
மஹாளய பட்சம்: மகாளய பட்சம் என்பது முன்னோர்களுக்கான காலம். மகாளயம் கூட்டாக, ஒன்றாக என்று அர்த்தம். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். நம் முன்னோர்கள் அனைவரும் கூட்டாகவும் ஒன்றாகவுமாக பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு, நம் வீட்டுக்கு வந்து நம்மைப் பார்க்கிறார்கள் என்பதாக ஐதீகம். அன்றைய தினம் உங்கள் முன்னோர்களை வணங்கி வழிபடுவது சிறப்பு.
 
திருவோண விரதம்: திருவோண விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாள் இரவே உணவு உண்ணக் கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்து சென்று துளசி மாலை சாத்தி தரிசித்து வர வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். பெருமாள் பாடல்களை பாராயணம் செய்தல் வேண்டும்.மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்