அகத்தியர் ஜெயந்தி எப்போது கொண்டாடப்படுகிறது தெரியுமா...?

வியாழன், 23 டிசம்பர் 2021 (17:23 IST)
அகத்தியர் முனிவர் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4 யுகம் 48 நாட்கள் ஆகும். சித்தம் என்பது மனம், புத்தி, சித்து என்பது புத்தியால் ஆகிற காரியம். சித்தர் புத்தியைக் கட்டுப்படுத்தியவர். 

யோகத்தின் மூலமும், தியானத்தின் மூலமும் புத்தியைக் கட்டுப்படுத்தும் சித்தர்கள் சாகாநிலையைப் பெற்றவர்கள். தன் உடம்பை விட்டு மற்றொரு உடலில் புகுந்து, அதாவது, கூடுவிட்டுக் கூடு பாயும் ஆற்றல் பெற்றவர்கள். 
 
அவர்கள் தம் வாழ்வின் அனுபவத்தில் கண்டறிந்த பல உண்மைகளையும் நமக்குப் பாடல்களாகக் கொடுத்துச் சென்றுள்ளனர். மனிதர்களான நாம் நல்வழியில் சென்று செம்மையுற்று வாழ மனநலம்பெற ஆன்மிக வழிகளையும், உடல்நலம் பெற அரியவகை இயற்கை மருந்துகளையும் உணவுமுறைகளையும் தந்து சென்றுள்ளனர்.
 
எண்ணற்ற சித்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்ததாகப் பல நூல்கள் எடுத்துரைக்கின்றன. அவர்களில் 18 பேர்கள் மிகவும் புகழ்பெற்றவர்களாகக் கருதப்படுகின்றனர். 1. அகத்தியர் 2. போகர், 3. புலிப்பாணி, 4. திருமூலர், 5. இராமதேவர், 6. இடைக்காடர், 7. கருவூரார், 8. கமலமுனிவர், 9. கொங்கணர், 10. குதம்பைச்சித்தர், 11. சட்டைமுனிவர், 12. கோரக்கர், 13. பதஞ்சலி, 14. பாம்பாட்டிச் சித்தர், 15. தன்வந்திரி, 16. நந்தீசுவரர், 17. மச்சமுனி, 18. சுந்தரானந்தர்.
 
அனிமா, மகிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம், கரிமா எனும் எட்டு சித்திகளையும் அட்டமாசித்திகள் என்பார்கள். இப்படிப் பட்ட அட்டமாசித்திகளைப் பெற்றவர்களையே சித்தர்கள் என்றழைப்பர். இந்தப் பதினென்சித்தர்களும் அட்ட மாசித்திகளின் மூலம் பல அற்புதங்களையும் வியக்கத்தக்க நிகழ்வு களையும் நிகழ்த்தினார்கள் என்பதை புராணங்களின் வாயிலாக நாம் அறியலாம். அகத்தியர் சித்தர்களில் முதன்மையானவர். அகத்தியர் என்ற குறுமுனியை முன்னிறுத்தாமல் சித்த வைத்தியர்கள் வைத்தியத்தை மேற்கொள்வதில்லை எனலாம். வைத்தியத்திற்கு தேவையான மூலிகையைப் பறிப்பதற்கு முன்பு, அதற்குத் தக்க பூசைகள் செய்து, அகஸ்தியர் சாபம் நசி நசி என்று கூறிய பின்பே அதனைப் பறிப்பார்கள்.
 
அகத்தியரின் நூல்கள் தொண்ணூற்றுக்கும் மேற்பட்டவை எனக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மனிதகுலத் தலைமுறைக்குப் பயன்பெற்று வாழும் வகையில் அளித்துள்ளார். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த அகத்தியர் ஜீவ சமாதியான இடம் கேரளாவிலுள்ள அனந்தசயனம் என்றழைக்கப்பட்ட இன்றைய திருவனந்தபுரம் எனக் கூறுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்