பார்க்கவ மஹரிஷியின் மகளாக மகாலட்சுமி, பார்கவி என்ற பெயரில் பூமியில் பிறந்த நாளும் பங்குனி உத்திர நாளில்தான். எனவே, இந்த நாள் லட்சுமி கடாட்சமாக விளங்குகிறது.
உத்திர நட்சத்திரத்தில் கூடியிருக்கும் சந்திரபகவான் இந்த நாளில் களையுடன், கன்னி ராசியிலிருந்து களங்கமின்றி காட்சி தருவான். அப்போது சந்திரனை வணங்கினால் குடும்ப வாழ்வு சிறப்படையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வள்ளிப்பிராட்டி அவதரித்ததும், தர்ம சாஸ்தாவான ஸ்ரீ ஐயப்பன் உதித்ததும் இந்த நன்னாளில்தான்.
12 என்ற எண்ணுக்குச் சிறப்பு சேர்க்கும் இந்த நாள், பன்னிரு கையும், பன்னிரு விழியும், பன்னிரு செவியும் கொண்ட வேலவனின் சிறப்பான நாளாகக் கருதப்பட்டு, முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள்தோறும் சிறப்பான விழா கொண்டாடப்படுகிறது.