சூரியன் தான் இழந்த சக்தியை மீண்டும் பெற்றது எப்படி தெரியுமா...?
தட்சன், தான் நடத்திய யாகத்திற்கு அனைவரையும் அழைத்தான். ஆனால் தான் என்ற அகந்தை தலைக்கு ஏறியதால் சிவபெருமானை அழைக்கவில்லை. இதனால் கோபம் கொண்டார் சிவபெருமான்.
இந்த யாகத்திற்கு சந்திரனும் சூரியனும் முதலில் சென்று அமர்ந்தனர். எனவே இருவரும் தங்கள் ஒளியை இழந்தனர். சூரியன் ஒளியை இழந்ததால் அண்ட சராசரங்கள் இருளில் மூழ்கின. தட்சன் நடத்திய யாகத்தில் தான் கலந்து கொண்டது எவ்வளவு பெரிய தவறு என உணர்ந்தான் சூரியன்.
எனக்குள் ஈசன் ஒளிர வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கேட்டு குருவின் முன் கலங்கி நின்றான். குரு இலுப்பை மரங்கள் நிறைந்த வனத்தைக் காட்டினார். சூரியன் அந்த வனத்தை அடைந்ததும் தன்னால் ஓர் பேரொளி படர்வதை உணர்ந்தான்.
கோடி சூரிய பிரகாசராக விளங்கும் இறைவனை தினந்தினம் பூஜித்தான். இழந்த தன் முழு சக்தியையும் பெற்றான். எத்தனை யுகமானாலும் தன்னுடைய முதல் கதிரை இத்தலத்து இறைவனின் மீது செலுத்தி வணங்கி விட்டுதான் பிரபஞ்சத்தின் மீது தன் கதிர்களை பாய்சுவதாக புராணத் தகவல் கூறுகிறது.
சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றான்.