திருமால் சக்கரத்தினை யாரிடம் இருந்து பெற்றார் தெரியுமா...?

சலந்தரன் என்னும் அசுரன் தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனது தந்தை சமுத்திரராஜன். தாய் கங்காதேவி. இதனால், அவனது ஆணவத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. 

இந்திரனை ஓடஓட விரட்டிய அவன், விதியை நிர்ணயிக்கும் நான்முகனின் விதியையே கூட சிறிது நேரம் மாற்றி விட்டான். அவரை ஒருமுறை பிடித்த அவன், கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டான். நான்முகன், அவனிடமிருந்து தப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. இதையடுத்து, அவன் திருமாலைக் குறிவைத்தான். திருமாலை அவனால் வெல்ல முடியவில்லை. அதே நேரம், அவனையும் கொல்ல திருமாலால் முடியவில்லை.
 
அந்தளவுக்கு அவனது தவபலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய பரம்பொருள் சிவனால் தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற் கேற்ப, அவனும் ஒருமுறை கைலாயம் சென்றான். அங்கே, சிவபெருமான் ஒரு முதியவரின் வேடத்தில் இருந்தார். அவரிடம் சலந்தரன், சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கைலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன், என்றான். சிவன் அவனிடம், நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி, என்றார். தாராளமாக! தேர்வைத்துவக்கலாம், என்றான்.
 
சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டார். இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம், என்றார். சலந்தரன் கலங்கவில்லை. இதென்ன பிரமாதம் என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான். அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான்.
 
இந்த சக்கரம் தன்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் பயன்படும் என்று உணர்ந்தார் திருமால். பரம்பொருள் சிவபெருமானிடம் அதைப் பெறுவதற்காக வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும் சிவன் கூறினார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தார் திருமால். 
 
ஒருநாள், ஒரு பூ குறைந்தது. திருமால் சற்றும் யோசிக்காமல் தன் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தார். அவரின் பூசையை மெச்சிய பரம்பொருள் சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் பரிசாக அளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்