கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். திருக்கார்த்திகை அன்று இல்லங்களில் வரிசையாக தீப அலங்காரம் செய்வது வழக்கம். இதனால் தீய சக்திகள் விலகும், மகாலட்சுமி இல்லத்தில் குடி கொள்வாள் என்கிறது சாஸ்திரம்.
வீட்டில் பழைய அகல் விளக்குகள் இருந்தாலும், வருடம் வருடம் ஒரு சில புதிய விளக்குகளை வாங்கி விளக்கேற்ற வேண்டும். பழைய அகல் விளக்குகளை கொதிக்கும் நீரில் துவைக்கும் சோப்பு சிறிது போட்டு ஊற வைக்கவும். அப்போதுதான் எண்ணெய் பிசுக்கு போகும். நன்றாக தேய்த்து கழுவி காய வைக்க வேண்டும்.
காய்ந்த மண் அகல் விளக்குகளை எடுத்து சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். சந்தனம், குங்குமம் வைப்பதால் விளக்கு மங்களகரமாக இருக்கும். திரி போடும் இடத்தில் பொட்டு வைக்காமல் இடைப்பட்ட இடங்களில் சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.