மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்ட லட்சுமிகளாக வழிபடுவர்.
அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்கிறது சாஸ்திரம். எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் வைத்து வழிபடுகின்றனர்.
வரலட்சுமி விரதத்தின் மேன்மையைச் சொல்லும் புராணக் கதைகள் நிறைய உண்டு. சௌராஷ்டிர நாட்டின் ராணியாக இருந்த சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால் ஒருமுறை மகாலட்சுமியை அவமதித்தாள். கர்வம் கொண்டு அன்னை லட்சுமியை அவமதித்ததால், செல்வம் அனைத்தும் இழந்து வாடினாள்.
ராணி சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வாதீனமாக ஒருமுறை வரலட்சுமி விரதம் பற்றி அறிந்தாள். அதுமுதல் அந்த விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினாள். சாருமதியின் இந்த விரதத்தால் மகிழ்ந்த அன்னை லட்சுமி, அவளுக்கு நலன்கள் அனைத்தும் அருளினாள்.
தன் மகளின் நிலையைப் பார்த்து, அவள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தை தானும் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றாள் சுசந்திரா. அவள் வாழ்வு மீண்டும் வளம் நிறைந்ததாக ஆனது என்கிறது புராணக்கதை.