சதுர்த்தி விரதம் மேற்கொள்வதால் உண்டாகும் பலன்கள் !!

திங்கள், 21 மார்ச் 2022 (14:42 IST)
பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி தினம். அன்றைக்கு மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.


விநாயகரைப் போலவே, விரதங்களுக்குள் முதன்மையானதும் எளிமையானதும் சதுர்த்தி விரதம்தான். முதன்முதலில் சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பிறகுதான், கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பொதுவான நியதி.

அடக்கமின்றி தன்னைப் பார்த்து சிரித்த சந்திரனை, ஒளியில்லாமல் போகும்படி சபித்தார் விநாயகர். கடும் தவத்துக்குப் பிறகு ஒரு சதுர்த்தி தினத்தில், சந்திரனின் சாபத்தை நீக்கினார் கணநாதர். எனவே, சந்திர பலம் பெற விரும்புவோர் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும்.

மாதம்தோறும் வருகிற சதுர்த்தி நாள்களில் விரதமிருந்து விநாயகரை வழிபடலாம். 11 சதுர்த்தி தினங்களில் விரதமிருந்து சதுர்த்தி  விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்.  பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்து, நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டும், தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும்.

கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், ஆழாக்குப் பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, பசுவுக்குக் கொடுக்க வேண்டும். கணபதியோடு பசு வழிபாடு செய்வது கூடுதல் நன்மை தரும்.

வீட்டிலேயே மோதகம், சித்திரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல்,  கொழுக்கட்டை, சுண்டல் என்று தயாரித்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்