நவகிரக வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் !!

ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகம் 'கோள்' அமைப்பு கொண்டது. ஆனால் ராகு-கேது எனப்படும் கிரகங்களுக்கு கோள் இல்லை. அவை 'நிழல் கிரகங்கள்' என அழைக்கப்படுகின்றன. 

ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு நபருக்கு மிகுதியான நற்பலன்களை கொடுக்கும் சக்தி கொண்ட கிரகமாக குரு கிரகம் கருதப்படுகிறது. அந்த குரு கிரகத்தை காட்டிலும் அதிக நற்பலன்களை தரும் சக்தி வாய்ந்த கிரகமாக சுக்கிரன் என கூறப்படுகிறது. 
 
இந்த இரண்டு கிரகங்களும் பொதுவாக எந்த ஒரு ஜாதகருக்கும் கெடுபலன்களை காட்டிலும் நற்பலன்கள் அதிகம் கொடுப்பதால் இவை சுப கிரகங்களாக கருதப்படுகின்றன. ஆனால் ஒரு ஜாதகருக்கு குரு, சுக்கிரனை காட்டிலும் மிகுதியான நற்பலன்களையோ அல்லது சனி கிரகத்தை காட்டிலும் மிகுதியான கெடுபலன்களையோ கொடுக்கக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக நிழல் கிரகங்களில் ஒன்றாக “ராகு” கிரகம் கருதப்படுகிறது.
 
எந்த ஒரு நபரும் தங்கள் வாழ்வில் நவகிரக வழிபாடு செய்யும் சமயம் மற்ற கிரகங்களை காட்டிலும் ராகு பகவானை சாந்தி படுத்தும் பூஜை செய்து வழிபடுவது மிகவும் நல்லது. பெரும்பாலானோர் செவ்வாய் கிழமை வருகின்ற ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழிபாடு ராகு கிரகத்தால் ஏற்படவிருக்கின்ற தீய பலன்களை குறைத்து, நற்பலன்களை அதிகப்படுத்தும்.
 
முடிந்தால் வாரத்தில் செவ்வாய் கிழமை மட்டுமல்லாது அனைத்து கிழமைகளிலும் ராகு கால வேளையில் நவக்கிரக சந்நிதிக்கு சென்று ராகு பகவான் துர்க்கை அம்மன் அல்லது பைரவர் போன்ற தெய்வங்களுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் ராகு கிரகத்தின் தீய தாக்கங்கள் விரைவாக குறைவதோடு, உங்களின் வேண்டுதல் விரைவாக நிறைவேற வழிவகுக்கும்.
 
ராகு பகவானால் தீய பலன்கள் ஏற்படாமல் நற்பலன்கள் மட்டும் உண்டாக வருடத்திற்கு ஒரு முறை திருநாகேஸ்வரம், நாகர்கோவில் போன்ற ஊர்களில் இருக்கும் ராகு பரிகார கோவில்களுக்கு சென்று ராகு சாந்தி பூஜை அல்லது ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும். திருநாகேஸ்வரம் வரை செல்லமுடியாத சென்னை வாசிகள் குன்றத்தூரில் வீற்று அருள்பாலிக்கும் திருநாகேஸ்வரரை வணங்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்