ஆடி வெள்ளியில் மாவிளக்கு ஏற்றுவதால் உண்டாகும் நற்பலன்கள் !!

ஆடி மாதம் என்றாலே தெய்வீக மாதமாக கருதப்படுகிறது. இம்மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு மாவிளக்கு போடுதல், கூழ் வார்த்தல் போன்ற சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.
 

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குச் சிறப்பான மாதம். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் களைக்கட்டும்.  அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தினை வரவேற்பதுபோல் அம்மாதத்தின் முதல் நாளைப் பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம்.
 
தெய்வ சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. பச்சரிசி மாவையும், வெல்லச் சர்க்கரையும், ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, அதில் சிறிது நெய் விட்டு மாவாகப் பிசைந்து, அந்த மாவை வாழை இலையின் நடுவில் பரப்பி, அந்த மாவின் நடுப்பகுதியில் குழி போல் செய்து அதில் நெய் விட்டுத் திரி போட்டு தீபம் ஏற்றி தெய்வ சன்னிதியில் குறிப்பாக அம்மன் சன்னிதியில் வைத்து, பிரதட்சணம் செய்து, நமஸ்காரம் செய்து வேண்டிக் கொள்வதே மாவிளக்கு போடுதல் என்று கூறப்படுகிறது. இது ஒரு சிறப்பான  வழிபாடு.
 
குடும்பத்தில் திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும் முன்னர் இவ்வாறு குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட்டுப் பிரார்த்தித்துக் கொள்வதால், நிகழ்ச்சிகள் தடங்கலின்றி நடக்கக் காரணமாக அமையும்.
 
மேலும், ஒவ்வொரு குடும்பத்திலும் வருடத்துக்கு ஒருமுறை குலதெய்வ சன்னிதியில் அல்லது தனது வீட்டில் நல்ல நாள் பார்த்து உரல், உலக்கை கொண்டு தன் வீட்டிலேயே பச்சரிசி மாவை இடித்துத் தயார் செய்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அம்பாள் சன்னிதியில் மாவிளக்கு தீபம் ஏற்றுவது குடும்பத்தில் மென்மேலும் நன்மைகள் அதிகரிக்கக் காரணமாக அமையும். ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்புரிவாள் என்பது  ஐதீகம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்