சூரியனும், சந்திரனும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வலம் வந்து வழிபட்ட அஷ்டலிங்க சன்னதிகளுக்கு நடுவே, கிரி உருவான கருணைக்கடலாக காட்சி தரும் ஜோதிமலை, வலம்வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்கும் அருள்மலை.
சித்தர்களும், ரிஷிகளும், யோகிகளும், மகான்களும் தவமிருந்து வழிபட்ட இன்றைக்கும் அருவமாக வலம் வந்து வழிபடுகிற அண்ணாமலையை கிரிவலம் செல்லும் பக்தர்கள், மூலிகை, சந்தனம், ஜவ்வாது, சாம்பிராணி, விபூதி, வாசமலர்களின் நறுமணங்களை உணரமுடியும்.
பிறவிப்பிணி நீங்கச் செய்யும் வல்லமை கிரிவலத்துக்கு மட்டுமே உண்டு. மலை வலம் செல்ல ஒரடி எடுத்து வைத்தாலே ஓரு யாகம் செய்த பலனை பெருவோம், ஈரடி எடுத்து வைத்தால் ராஜசூய யாக பலனை பெருவோம். மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலனை பெறுவோம்.
மலைச்சுற்றும்போது உள்ளமெல்லாம் இறை சிந்தனை மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என்கின்றனர் சிவனடியார்கள். மலைவலம் தொடங்கும் முன்பு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்னீராட வேண்டும். திருநீறு ஆணிந்து, ஒம் நமச்சிவாய எனும் மந்திரத்தை உச்சரித்தபடியே செல்லவேண்டும்.