திருமாலின் 17ஆவது அவதாரம் நோய்களை தீர்க்கும் தன்வந்திரி

ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான தேவேந்திரன் தனது செல்வங்களை இழந்தான். மீண்டும் அவற்றைப் பெற திருமாலின் அறிவுரைக்கேற்ப  அசுரர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. அதை சிவபெருமான் தன்  கண்டத்தில் இருத்திக் கொண்டு நீல கண்டனானார். 

தொடர்ந்து காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை போன்ற பல்வேறு புனிதமான பொருட்கள்  வந்தன. பாற்கடலிலிருந்து கடைசியில் திருமாலே தன்வந்திரியாக அம்ருத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டார். தேவேந்திரன் சாவா மருந்தான அமிர்தத்தையும்தான்  இழந்த பிற பொருட்களையும் பெற்று தேவலோகம் சென்றான்.
 
திருமால் தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள திரயோதசி நாளா கும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாக  "தன்திரேயாஸ்' என்று வட மாநில மக்கள் அனுஷ்டிக்கின்றனர். திருமாலின் 24 அவதாரங்களில் 17-ஆவது அவதாரமாக தன்வந்திரி அவதாரம் விளங்குகிறது.
தன்வந்திரி பகவான் கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர்தான்  தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு  நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால்  நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்