தந்திரங்களின் கடவுளாகக் கருதப்படுபவர் பக்லாமுகியாகும். மற்ற ஏனைய கடவுள்களை விடவும் இந்த பக்லாமுகி தனி இடத்தைப் பிடித்துள்ளவர். மா பக்லாமுகிக்கு 3 கோயில்கள் மட்டுமே உள்ளன. அதில் சித்தபீதா கோயில் அனைவரும் அறிந்ததே.
நல்கேடாவிலும் பக்லாமுகிக்கு மிகவும் பழமையான கோயில் ஒன்று உள்ளது.
இந்த வார புனிதப் பயணத்தில் நல்கேடாவில் உள்ள மா பக்லாமுகி கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.
இந்தியாவில் பக்லாமுகிக்கு மத்தியப்பிரதேசம் தாடியாவிலும், இமாச்சலப் பிரதேசம் கங்கடாவிலும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நல்கேடாவிலும் கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மகத்துவத்தைப் பெற்றவையாகும்.
webdunia photo
WD
ஷஜாபுர் மாவட்டத்தில் நல்கடோ பகுதியில் லகுன்டர் நதியோரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலில் இருக்கும் மா பக்லாமுகியின் திருவுருவம் மூன்று முகங்களைக் கொண்டதாகும்.
இந்த கோயில் துவாபர் யுகத்தில் கட்டப்பட்டுள்ளது. மிகுந்த சக்தி வாய்ந்த இந்த கோயிலுக்கு, துறவிகளும், தாந்திரீகர்களும் வந்து பல்வேறு பூஜைகள் செய்து சக்திகளைப் பெறுகின்றனர்.
இந்த கோயிலில் பக்லாமுகியைத் தவிர லஷ்மி, கிருஷ்ணா, ஹனுமான், பைரவர், சரஸ்வதி சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மகாபாரதத்தில் கிருஷ்ணர் வெற்றி பெற்றதை நினைவு கூறும் வகையில் யுதிஷ்டரால் இந்த கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இங்குள்ள பக்லாமுகியின் சிலை சுயம்புவாகத் தோன்றியதாகவும் நம்பப்படுகிறது.
webdunia photo
WD
இந்தக் கோயிலின் பூசாரி கைலாஷ் நாராயண் ஷர்மா கூறுகையில், இந்த கோயில் மிகவும் பழமையானது, சுமார் 10ஆம் நூற்றாண்டில் இருந்து இந்த கோயில் வணங்கப்பட்டு வருகிறது. 1815ஆம் ஆண்டு இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு வந்து யாகங்களும், பூஜைகளும் செய்து தங்களது வேண்டுதலை தெரிவித்தால் நிச்சயம் அவர்கள் அந்த காரியத்தில் வெற்றி அடைவார்கள் என்று தெரிவித்தார்.
இந்த கோயிலின் மற்ற பூசாரிகளான கோபால் பாண்டா, மனோஹர்லால் பாண்டா ஆகியோர் கூறுகையில், தந்திரங்களுக்கு உரிய கடவுளாக மா பக்லாமுகி வணங்கப்படுவதால், தந்திரத்தில் கைதேர்ந்தவர்கள் பலரும் இங்கு வருகின்றனர். அவர்களுக்கு மிகவும் முக்கிய தலமாக இந்த கோயில் விளங்குகிறது. யுதிஷ்டரால் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது, மேலும் ஒரு சிறப்பாகும் என்கின்றனர்.
எப்படிச் செல்வது?
விமான மார்கம் - இந்தூர் விமான நிலையத்திற்கு மிக அருகில் நல்கேடா கோயில் அமைந்து உள்ளது.
ரயில் மார்கம் - உஜ்ஜைன் அல்லது தேவாஸ் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து டாக்சியில் செல்லலாம்.
சாலை மார்கம் - இந்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்து அல்லது டாக்சிகள் இயக்கப்படுகின்றன.