டாகோரில் உள்ள ராஞ்ச்ஹோட்ரைஜி

ஞாயிறு, 25 நவம்பர் 2007 (15:23 IST)
webdunia photoWD
குஜராத் மாநிலத்தின் கேடா மாவட்டத்தில் உள்ளது டாகோர் என்ற இடம். இது முந்தைய காலத்தில் தங்காபூர் என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்போது அங்குள்ள தங்நாத் என்ற சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. 1722ஆம் ஆண்டு ராஞ்ச்ஹோட்ரைஜி என்ற கிருஷ்ணர் கோயில் கட்டப்பட்ட பின்பு டாகோர் கிருஷ்ண பக்தர்களிடையே பிரசித்திபெற்றது.

டாகோர் கிருஷ்ணரின் ராஞ்ச்ஹோட்ரைஜி கோயிலுக்கு பெயர்பெற்றது. மதுராவில் ஜராசந்தா என்பவனுக்கு எதிராக நடந்த போரின்போது கிருஷ்ணருக்கு வைக்கப்பட்ட பெயரே ராஞ்ச்ஹோட் ஆகும்.

துவாரக்காவில் உள்ள துவார்காதிஷ் கோயிலின் அமைப்பு போன்றே ராஞ்ச்ஹோட்ரை கோயிலின் அமைப்பும் இருக்கும். இரண்டு கோயில்களின் மூலவர்களும் கருப்பு கல்லால் செய்யப்பட்டவர்களே ஆவர். மேலும் ரஞ்ச்ஹோட்ரை கோயிலில் உள்ள மூலவரின் பாதங்களைத் தொட்டு வணங்கவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

webdunia photoWD
காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு நாளும் காலை 6.45 மணிக்கு மங்களா-ஆரத்தி செய்யப்படுகிறது. பக்தர்களின் பார்வையிலேயே இறைவனுக்கு அலங்காரமும், ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.

இந்த கோயிலில் ஆண்டு தோறும் 35 விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அதில் குறிப்பாக கார்த்திகை, பங்குனி, சித்திரை, அஸ்வினி மாதங்களில் வரும் பெளர்ணமி தினங்களில் சிறப்பான விழாக்கள் நடைபெறும். அன்றைய தினங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்தன்று அன்னக்கூட் என்ற விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கோயிலில் கிருஷ்ணருக்கு இனிப்புகளையும், உணவு பொருட்களையும் பக்தர்கள் படைக்கின்றனர்.

வைஷ்ணவர்களின் பண்டிகைகளான ஹோலி, அமல்கா ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, நந்த் மஹோத்சவ், ரத யாத்திரை, தசரா போன்றவையும் இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த விழா நாட்களின் போது கோபாலனின் சிலை அலங்கரித்து யானை மீது வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு வருவர். அப்போது அந்த ஊர்வலத்தில் பக்தர்களால் இசைக் கருவிகளும் இசைக்கப்படும்.

webdunia photoWD
டாகோரில் உள்ள இந்த கிருஷ்ணர் கோயிலுக்கு வந்தால், இந்துக்களின் மிக முக்கியமான 4 கோயில்களுக்குப் போன புன்னியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

டாகோருக்கு எப்படி செல்வது :

விமான மார்கம்

அஹமதாபாத் விமான நிலையம் சென்று அங்கிருந்து செல்லலாம். அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 95 கி.மீ. தூரத்தில் டாகோர் உள்ளது.

ரயில் மார்கம்

ஆனந்த் கோத்ரா அகல ரயில் பாதையில் உள்ளது டாகோர்.

சாலை மார்கம்

அஹமதாபாத் மற்றும் வதோத்ராவில் இருந்து அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் செல்கின்றன.