திருவிளையாடற்புராணம் புத்தக வெளியீட்டு விழா

திங்கள், 10 ஆகஸ்ட் 2009 (11:19 IST)
நெல்லை மாவட்டத்தில் உள்ள திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருவிளையாடற்புராணம் புத்தகம் மற்றும் க.லலிதா பாரதி பாடிய இன்னிசை குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெ‌ற்றது.

விழாவில், கீதா கந்தசாமி வரவேற்றார். பேராசிரியர் ம.வே.பசுபதி உரையுடன் கூடிய திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருவிளையாடற்புராணம் புத்தகத்தை விழாவிற்கு தலைமை வகித்த குஜராத் உய‌ர்‌நீ‌திம‌ன்ற முன்னாள் தலைமை நீதிபதி பு.ரா. கோகுலகிருஷ்ணன் வெளியிட்டார். புத்தகத்தின் முதல் பிரதியை தமிழக அரசின் முன்னாள் நிதித்துறை செயலர் அ.மு.சுவாமிநாதன் பெற்றுக் கொண்டார்.

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற முன்னாள் நீதிபதி சு. ரத்தினவேல்பாண்டியனின் பேத்தி க.லலிதா பாரதி பாடிய இன்னிசைக் குறுந்தகடு‌ம் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டது. குறுந்தகட்டின் முதல் பிரதியை இசையறிஞர் லலிதா சிவகுமார் பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவிற்கு முன்னிலை வகித்த முன்னாள் நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் ‌விழா‌வி‌ல் பேசுகை‌யி‌ல், நான் ஆன்மீகத் துறையில் இறங்குவதற்கு முதல்காரணமாக இருந்தவர் கொல்கத்தா தமிழ் கழக தலைவர் மு.சீனிவாசன் ஆவார். அதன்பிறகு காஞ்சி பரமாச்சாரியார் என்னை அழைத்து திருப்புடைமருதூர் கோவிலை புனரமைக்க வேண்டியது உனது கடமை என்று கூறினார். அதனால் விழுந்துவிடும் நிலையில் இருந்த அந்த கோவிலை நானும், எனது துணைவியார் லலிதா அம்மையாரும் முழுமுயற்சி செய்து புனரமைத்தோம்.

தற்போது திருப்புடைமருதூர் சுற்றுலா தலமாகவும், பறவைகள் சரணாலயமாகவும் திகழ்கிறது. அங்கு நான் தனிப்பட்ட முறையில் வனப்பகுதி ஒன்றை உருவாக்கி உள்ளேன். இது, அகில இந்திய புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. எங்கள் வீட்டுக்கு வெளிநாட்டு பறவைகள் வந்து உட்கார்ந்து உலவிவிட்டுப் போகிறது. திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருவிளையாடற்புராணத்திற்கு பேராசிரியர் ம.வே.பசுபதி 3 ஆண்டுகள் முயற்சி செய்து உரை எழுதியுள்ளார். அது, இன்று புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது.

இந்தக் கோவிலை உயர்ந்த இடத்திற்கு கொண்டு வருவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் உடனுறை அருள்மிகு நாறும்பூநாதர் கோவில் பற்றி ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு கழகம் அமைக்க வேண்டும். அதற்கு ஆகும் செலவு முழுவதையும் எனது 2-வது மகன் ரவிச்சந்திரன் ஏற்றுக் கொள்வார் எ‌ன்று கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்