கனிமொழி எழுதிய கவிதை நூல் வெளியீடு

செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (12:16 IST)
கவிஞரு‌ம், நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினருமான கனிமொழி எழுதிய சிகரங்களில் உறைகிறது காலம் என்ற 3-வது கவிதை நூல் வெளியீட்டு விழா செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று நடைபெ‌ற்றது.

நூ‌ல் வெ‌ளி‌யீ‌ட்டு ‌விழா‌வி‌ற்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் தலைமை தா‌ங்‌கினா‌ர். ‌த‌மிழக நிதி அமைச்சர் அன்பழகன் நூலை வெளியிட, மலையாள எழுத்தாளர் சக்கரியா பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை காண முதல்-அமைச்சர் கருணாநிதி விழாவுக்கு வந்திருந்தார். அவர் முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சி முழுவதையும் கண்டு ரசித்தார். நூல் வெளியிடப்பட்டதும் கனிமொழி மேடையில் இருந்து இறங்கி வந்து ஒரு நூலை தந்தையிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார். அதோடு முன்வரிசையில் அமர்ந்திருந்த துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கும் க‌னிமொ‌ழி நூலை வழங்கினார்.

தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.ராஜேந்திரன், பரதநாட்டிய கலைஞர் அலர்மேல்வள்ளி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். கவிஞர் இளையபாரதி வரவேற்றார். முன்னதாக இந்த நூலில் உள்ள கவிதைகளை, `கவிதை நேசமாகிறது' என்ற தலைப்பில் பாடல்-நடனமாக நடத்திக் காட்டினர். இந்த குழுவில் தமிழச்சி தங்கபாண்டியன், நடிகை ரோகிணி, சின்னத்திரை நடிகைகள் ஷைலஜா, நிகிலாகேசவன், ரேவதி ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் முதல்-அமைச்சரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகன் மு.க.தமிழரசு, மத்திய மந்திரிகள் தயாநிதி மாறன், ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், மத்திய அமை‌ச்ச‌ர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, அவரது கணவர் வெங்கடேஷ், டி.ஆர்.பாலு எம்.பி., இயக்குநர் அமிர்தம், கவிஞர் அப்துல்ரஹ்மான், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்