ஓ ஈழம் நூல் வெளியீட்டு விழா

திங்கள், 20 ஜூலை 2009 (17:37 IST)
கன்னடப் பத்திரிக்கையாளர் குமார் ப்ரோடிகட்டி எழுதிய ஓ ஈழம் என்று நூல் கருநாடகத் தலைநகர் பெங்களூருவில் வெளியிடப்பட்டது.

பெங்களூரு காந்தி பஜார், கரூர் வைஸ்யா வங்கி பணியாளர் சங்க அரங்கில் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்ற வெளியீட்டு விழாவில், லங்கேஷ் பத்திரிக்கையின் அதிபர் கெளரி லங்கேஷ் தலைமையில் ஜெய் ஈழம் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் இப்புத்தகம் வெளியிடப்பட்டது. புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் முனைவர் பஞ்சகரே. ஜெயப்பிரகாஷ் நூலை வெளியிட்டு அதன் மீது மதிப்புரை நிகழ்த்தினார்.

webdunia photoWD


ஈழத்துப் புலி பிரபாகரனின் வீரம், நமது நாட்டில் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய மைசூர்ப் புலி மாவீரன் திப்பு சுல்தானின் வீரத்திற்கு இணையானது என்று பெருமைப்படுத்திய பஞ்சகரே. ஜெயப்பிரகாஷ், தமிழீழ விடுதலைப் போரில் பின்னடைவு போன்ற தோற்றமிருந்தாலும், தமிழீழம் என்பது வரலாற்றுத் தேவை என்று கூறினார்.

தமிழீழம் தமிழர்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் முற்போக்கு சிந்தனையாளர்களும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குப் போராடுபவர்களும், தேசிய இன விடுதலை வேட்கையாளர்களும் தமிழீழத்திற்கு குரல் கொடுக்க வேண்டு்ம் என்று கூறினார்.

மனித உரிமை செயற்பாட்டாளர் சிவசுந்தர், பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம், கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் சி. இராமன், கருநாடக மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் இராவணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.