எதிர்ப்புகள் மறையும் இடம்

புதன், 9 ஜனவரி 2008 (14:51 IST)
சிற்றிதழ்: பிரும்ம ராக்ஷஸ்

(திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள தி. கண்ணன் என்பவரால் பிரும்ம ராஷஸ் கொண்டுவரப்பட்டது. இவர் கல்வெட்டுச்சோழன் என்ற சிறுகதைத் தொகுதியையும் எழுதியுள்ளார். இதற்கு முன்னர் பின் நவீனத்துவ சிந்தனைகளை தாங்கி வந்த "வித்தியாசம்" என்ற சிற்றிதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார்.

webdunia photoWD
'விமர்சன தளத்துள் எழுதாளர் சுதந்திரம் கேலிக்குள்ளாக்கப்படுவதை எதிர்த்து கோட்பாட்டு சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் முழக்கத்தோடு "பிரும்ம ராக்ஷஸ்" வெளிவந்தது. இதன் முதல் இதழிலிருந்து லக்ஷ்மி மணிவண்ணனின் "எதிர்ப்புகள் மறையும் இடம்" என்ற கவிதையை வெப் வாசகர்களுக்குத் தருகிறோம்)

எதிர்ப்புகள் மறையும் இடம்

முதலில் எதிர்க்கத் தொடங்கினோம்
தெளிவானதாக இல்லை என்ற போதும்
ஒரு வேளை எங்களைக் குறித்த எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்
ஆதி இனக் குழு சடங்காக
சுயவதைப் பண்டிகையாக
தடியடிகளும் இரும்புக்கவசங்களும் சிறைச்சாலைகளும் என்று
எதிர்ப்பை ஒடுக்கிக் கொண்டோம்
எதிர்ப்பை போலவே ஒடுக்குதலும் எங்களாலேயே
நிகழ்த்தப்பட்டது
நாடகம் சீரான தளத்தில் நடந்தது.
மீண்டும் எதிர்க்கத் தொடங்கினோம்
சுவரெழுத்துப் போராட்டங்கள், மறியல்கள்
என்று அவற்றை நிகழ்த்தினோம்
இப்போதும் எதுவும் தெளிவாக இல்லை
அறிவின் போலிச் சம நிலையில்
இயந்திரங்கள் இயங்குவதற்கான எதிர்ப்புகளாக
அவை இருக்கலாம்.
கிடைத்தவை கண்ணீர்ப் புகைக் குண்டுகள்
நீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரங்களின் சீற்றம்
துப்பாக்கி ரவைகள்
இப்போதும் நாடகத்தில் ஒரு பிழையும் இல்லை
மனித மூளையின் ஒவ்வொரு செல்லையும் பயன்படுத்தி
உருவாக்கப்பட்ட வதைக் கருவிகளாலும்
தலைகள் அறுக்கப்பட்டும் கழுவேற்றப்பட்டும்
குருதி கொட்டி கொலையுண்ட சாமிகள்
இரண்டு புறங்களிலும் வரலாற்றின் புலனற்ற வாள்களால்
செயல்பட்டார்கள்.
சுயசாவுகளும்
மனித வெடிகுண்டுகளும்
வடிவம் கொண்டன
பின்னர் எல்லாம் வழக்கமாயிற்று
எதிர்த்தோம் சம்பிரதாயமாக இருந்தது
ஒடுக்கினார்கள் சம்பிரதாயமாக இருந்தது
சிறைகளுக்குச் சென்றோம் சம்பிரதாயமாக இருந்தது
புதை மிதியடிகளால் மிதித்தார்கள்
சம்பிரதாயமாக இருந்தது
அதன் பிறகு தொடர்ச்சியாக நிகழ்ந்தவற்றில்
நாங்கள் பங்குக் கொள்ளவில்லை
பின் வலித்தோம்
காலைக் கடன்களை முடிப்பது போல
தொலைக்காட்சிப் பெட்டிகளையும்
பலாத்காரங்களையும்
பிச்சைக் காரர்களையும்
பார்த்துக் கொண்டிருந்தோம்
சமயம் என்னவாயிற்று என்று கூட
சக மனிதனிடம் விசாரிப்பதில்லை
சுவரெழுட்த்துகள் என்ன
புகார் கடிதங்கள் எழுதவும் கூட
விரல்களைப் பயன்படுத்துவது இல்லை
எந்த குறுக்குப் பாதைகள் வழியாகவும்
குறுக்கு விசாரணை நுழைந்து விடக்கூடாது
என்பதில் பழகி சந்து பொந்துகளைப்
பழகினோம் பழகினோம்
வீட்டு விலங்குகள் அபாயமற்ற இடங்களில் குரைத்தன
சந்துபொந்துகளில் அபாயமற்ற பாடல்கள் ஒலிக்க
கவிகள் தலைமறைவானார்கள்.
ஆயுதங்கள் எல்லாம் புலன்களிலிருந்து
அகற்றினோம்
பிரார்த்தனை கூடங்களில் மெழுகுவர்த்திகள் மீது
நெருப்பு பர்ற வைக்கவும்
தயக்கமேற்பட்டது
ஒரு நாளில் வாண வேடிக்கைகள்
அந்தரத்தில் மறைவது போல
முழுவதும் மறைந்து விட்டோம்
புறக்கணிப்புகள் மேலோங்க
ஒடுக்கியவர்கள் எங்கள் மறைவைக் கொண்டாடி
வாணவேடிக்கைகளில் ஈடுபட்டபோதுதான்
அவர்கள் தவறு மறைந்தும் ஒளிந்து மிருப்பதைப் பார்த்தார்கள்
அதுவும் ஒற்றை ஒளிக்கீற்றில்
அவ்வளவுதான்
தெளிவாயிற்று
நாங்கள் இல்லாமலாகிவிட்டதாகக் கருதப்படுகிற
அமானுஷ்யத்தில்
வலுவாக இருந்து கொண்டிருக்கிறோம்..