பாலபாரதியின் "தாயம்மா"

புதன், 11 ஜூன் 2008 (12:39 IST)
திரைப் பத்திரிகையாளராக வாழ்க்கையை தொடங்கி தற்போது திரைப்படத் துறையில் துணை இயக்குனராகியுள்ளவர் பாலபாரதி. திரைப்பட இயக்குனர்கள் சிலரின் போராட்டங்களைக் கூறும் "ஜெயித்த கதை" மற்றும் 75 ஆண்டுகால தமிழ் திரைப்பட வரலாற்றில் வெள்ளிவிழா கண்ட வெற்றிப் படங்களைப் பற்றிய "தமிழ் திரையுலகச் சாதனைப் படங்கள்" என்ற நூலையும் இவர் ஆக்கித் தந்துள்ளார்.

webdunia photoWD
பழனிக்கு அருகில் உள்ள கலையம்புத்தூர் என்ற ஒரு அழகிய கிராமம் இவரது சொந்த ஊராகும். அங்கு தனது பள்ளித் தோழனின் தங்கை வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு, சாயப்பட்டறை தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றதால், சூனியமாகிப்போன இளம் தளிரை பற்றிய சோக வாழ்வை இந்த தாயம்மாவில் படைத்துள்ளார்.

தாயம்மாவின் மகள் லட்சுமி. தாயம்மா உடல் நலம் குன்றியதால், மகள் லட்சுமி படிப்பை நிறுத்தி விட்டு அந்த ஊரில் அடியெடுத்து வைக்கும் சாயப்பட்டறை ஆலைக்கு வேலையில் சேர்கிறாள்.

சாயப்பட்டறைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் லட்சுமியின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்து கடைசியில் இறந்தே விடுகிறாள் அந்தச் சிறுமி. அதனை பொறுக்கமாட்டாத தாயம்மா பைத்தியம் ஆகிறாள்.

75 பக்கங்களில் ஒரு சோகக் கதையை விறுவிறுப்பாக எழுதியுள்ளார் பாலபாரதி. பெரும்பாலும் ஒரு திரைக்கதை வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது.

சிறு சிறு உணர்வுகளை அகழ்ந்தாய்ந்து செல்லும் இலக்கிய நுட்பத்தை தேடுபவர்களுக்கு இந்த நாவலில் ஏதுமில்லை.

மாறாக சுற்றுச்சூழலை கெடுத்து நாசமாக்கும் ஒரு சாயப்பட்டறை அந்த ஊரில் எவ்வாறு நுழைய முடிகிறது என்பதையும், அதற்கான அரசியல் பலம், பண பலம் என்ன செய்யும் என்பதையும், இந்த ஆதிகாரச் சக்திகளின் முன் அப்பாவி கிராம மக்கள் தங்கள் பாரம்பரிய விவசாயத் தொழில்களை இழந்து தவிப்பதையும் அவரளவில் உரக்கப் பேசியுள்ளார் பாலபாரதி.

முதலில் சாயப்பட்டறை‌க் கழிவை குடித்து மாடு ஒன்று இறக்கிறது. அப்போதும் ஊர் ம‌க்க‌‌ள் விழித்துக் கொள்ளவில்லை. லட்சுமியின் இறப்பு கிராம மக்களின் சக்தியை வெளிக்கொணருகிறது. இறுதியில் சாயப்பட்டறைக்கு சீல் வைக்கப்படுகிறது. வேலையிழந்தோருக்கு முதல்வர் அரசாங்க வேலை கொடுக்க உத்தரவாதம் அளிக்கிறார். ஆனால்... தாயம்மா... எதுவும் புரியாமல் நடைபிணமாய் வலம் வந்து கொண்டிருக்கிறாள்...

இந்த நாவல் 2001-ஆம் ஆண்டு மேனகா இதழ் தனது பிப்ரவரி மாத இதழில் முதன் முதலாக பிரசுரமானது. அதன் பிறகு 2006-ல் இது முழு நூல் வடிவம் பெற்று வெளிவந்துள்ளது.

இதனை ஒரு குறும்படமாக விழிப்புணர்வை வளர்க்கும் ஒரு பிரச்சார படமாகவே தயாரிக்கலாம். அந்த அளவிற்கு இதில் இன்றைய குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய அக்கறை தொனிக்கிறது.

சாயப்பட்டறையால் விஷமாகிப் போன சண்முகா நதி, பைத்தியமான தாயம்மா, உயிரை இழந்த இளந்தளிர் லட்சுமி, பகட்டு ஆசாமி மூர்த்தி, ஏமாற்றுக்கார நாட்டாமை, மக்களை நம்ப வைத்து மோசம் செய்யும் கலெக்டர் என்று பாத்திரப் படைப்புகள் உயிரோட்டமாக அமைந்துள்ளது.

இந்தக் கதையில் இன்னமும் சில விஷயங்களைச் சேர்த்தால் ஒரு முழு நீள திரைப்படமாகவும் உருவாக்கலாம்.