ஏலியன்களைத் தேடும் அதிசய விஞ்ஞானம்

செல்வன்

திங்கள், 24 நவம்பர் 2014 (13:34 IST)
சில பத்தாண்டுகளுக்கு முன்பு ரசவாதம் போல், பயனற்ற முயற்சியாக ஏலியன்களைத் தேடும் முயற்சி கருதபட்டது. செவ்வாயில் உயிர் இருக்கா போன்ற கேள்விகளில் ஹாலிவுட் பட இயக்குநர்கள் மட்டுமே ஆர்வம் காட்டினார்கள். விஞ்ஞானிகள் அத்துறை பக்கமே திரும்ப மறுத்தார்கள். சூரிய குடும்பத்தில் எந்தக் கிரகத்திலும் உயிர் இல்லை, நிலவிலும் காலடி வைத்தாகிவிட்டது, அங்கேயும் உயிர்கள் இல்லை. சூரியனுக்கு அருகே உள்ள நட்சத்திரத்திற்குச் செல்ல, 12 ஒளியாண்டுகள் ஆகும். ஆக, அங்கேயும் ஆராய முடியாது. ஆக ஏலியன் உயிர்களை இனி எங்கே தேடுவது எனத் திகைத்தும், பலன் இருக்காது எனக் கருதியும் விஞ்ஞானிகள் அத்துறையில் ஆர்வம் காட்டவில்லை.
 
1961இல் டிரேக் (drake)  எனும் விஞ்ஞானி, பிரபஞ்சத்தில் எத்தனை கிரகங்களில் ரேடியோ ஒலிக் கற்றைகளைப் பயன்படுத்தும் அளவு முன்னேறிய உயிர்கள் இருக்கலாம் என்பதைக் கண்டறியும் டிரேக் சமன்பாட்டை (drake equation) முன்மொழிந்தார். அதன்படி பிரபஞ்சத்தில் 20 முன்னேறிய நாகரிகங்கள் இருக்கலாம் என அன்று டிரேக் கூறினார். ஆனால் அன்று அது வெறும் யூகமாகக் கருதபட்டது. இன்னும் ஒரே ஒரு ஏலியன் உயிரைக் கூட கண்டறியாத காலகட்டத்தில் ரேடியோ மூலம் தகவல் தொடர்பு கொள்ளும் ஏலியன்கள் எண்ணிக்கையை இப்படிச் சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்வது?
 
இந்தச் சூழலில் 1995இல் மைக்கேல் மேயர் எனும் விஞ்ஞானி, யதேச்சையாக 51 பெகாஸி (51 pegasi) எனும் நட்சத்திரத்தை ஆராய்ந்தார். அதைச் சுற்றி 51 பெகாஸி பி (51 pegasi B) எனும் கிரகம் இருப்பதைக் கண்டறிந்தார். அந்தக் கிரகம், ஜூபிடருக்கு ஒப்பான எடையைக் கொண்டது. 2000 டிகிரி வெப்பம் கொண்டது. தன் சூரியனை அது நாலே நாளில் சுற்றி வருகிறது. இத்தகைய நரகச் சூழலில் ஒரு உயிரும் அந்தக் கிரகத்தில் வசிக்க முடியாது. ஆனால் சூரிய குடும்பத்தைத் தாண்டி ஒரு கிரகம் இருப்பதே விஞ்ஞானிகளுக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது. ஜூபிடர் மாதிரி ஒரு கிரகம் இருந்தால் ஏன் பூமி மாதிரி இன்னொரு கிரகம் இருக்க முடியாது? அதில் ஏன் உயிர்கள் இருக்க முடியாது?

 
மேலும் பல நட்சத்திரங்களில் கிரகங்கள் இருக்கும் செய்தி வெளிவர வர, டிரேக் சமன்பாட்டில் உள்ள பல புதிர்கள் விடுவிக்கப்பட்டன. இதன்படி 28 கோடி கிரகங்களில் ரேடியோ மூலம் தொடர்புகொள்ளும் அளவு முன்னேறிய சமூகங்கள் இருக்கலாம் என இன்று கூறுகிறார்கள். இதுவும் யூகமே. எனினும் 20இல் இருந்து 28 கோடிக்கு டிரேக் சமன்பாடு முன்னேறியதை அடுத்து, பலர் ஏலியன் உயிரினங்களில் ஆர்வம் காட்டினார்கள். பல கோடி டாலர்கள் ஆராய்ச்சிக்குக் குவிந்தன. இந்தச் சூழலில் ஆஸ்ட்ரோபயாலஜி எனப்படும் ஏலியன் உயிரினங்களை ஆராயும் துறை உருவானது. 
 
ஆஸ்ட்ரோபயாலஜி துறை இப்படி அங்கீகாரம் பெற்றதும் அது ஏலியன் உயிரினங்களை ஆராய்வதில் புதிய அணுகுமுறையை மேற்கொண்டது. பூமியைப் போன்ற கிரகங்களைத் தேடுவதை விடுத்து, பூமிக்குள்ளேயே மிகச் சவாலான சூழல்களில் உயிர்கள் வாழ்வதை ஆராயத் தொடங்கினார்கள். அண்டார்டிகாவில் பல லட்சம் ஆண்டுகளாகப் பனியால் மூடப்பட்ட வில்லன்ஸ் ஏரியில் (Wilhens lake) ஆய்வுகளை மேற்கொண்டு சூரிய ஒளியே பல லட்சம் ஆண்டுகளாகப் படாத அந்த ஏரியிலும் நுண்ணுயிர்கள் இருப்பதைக் கண்டறிந்தார்கள்.
 
அதன்பின் உயிர்கள் பூமியின் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டன. கடலுக்கடியில் சூரிய ஒளியே படாத இடத்திலும் ஹைட்ரஜன் சல்பைடு மூலம் ஆற்றலை அடைந்து, உயிர்கள் வாழ்வது கண்டறியபட்டது. இதே போல் மீதேனை ஆற்றலாக பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
 
மெக்ஸிகோவில் ஒரு மைல் ஆழத்தில் 3 பில்லியன் ஆண்டுகளாக வசிக்கும் நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை உருவான காலக்கட்டத்தில் பூமியில் நீரே கிடையாது. நிலவே உருவாகவில்லை. பூமி அன்று வசிக்கத் தகுதியற்ற இடம். அந்தச் சூழலிலேயே உயிர் தழைத்தது எனில் அதே போல் அவற்றால் ஏன் செவ்வாயில் 1 மைல் ஆழத்தில் வசிக்க முடியாது?
 
இதேபோல் அலாஸ்கா சுகோக் (Lake sukok) ஏரியில், மீதேனை ஆகாரமாகக் கொண்டு உயிர்கள் வசிப்பது கண்டறியப்பட்டதும் விஞ்ஞானிகளின் பார்வை, திடீரெனச் சனி கிரகத்தின் நிலவான டைட்டன் (Titan) பக்கம் திரும்பியது. டைட்டனில் உயிர்கள் வசிக்கத் துளி வாய்ப்பு இல்லை எனக் கருதப்பட்டது. காரணம், டைட்டனில் நீர் இல்லை. ஆனால் டைட்டன் முழுக்க மீதேன் இருந்தது. மீதேன் ஏரிகள், கடல்கள், சமுத்திரங்கள் இருந்தன. மீதேன் ஆவியாகி மேலே சென்று, மேகமாக மாறியது. பின் மழையாகப் பொழிந்தது. பூமியில் நீர் எப்படி மலைகளையும் பாறைகளையும் உருவாக்கியதோ, அதேபோல் திரவ மீதேன், டைட்டனின் மலைகளையும் பாறைகளையும் உருவாக்கியது. சுகோக் ஏரியில் மீதேனை ஆகாரமாகக் கொண்டு நுண்ணுயிர்கள் வசிக்க முடியுமெனில், டைட்டனில் ஏன் நுண்ணுயிர்கள் வசிக்க முடியாது? யார் கண்டார்கள் டைட்டனின் மீதேன் சமுத்திரத்தில் பெரிய உயிரினங்களே வசிக்கக் கூடும்
 
டைட்டனின் மீதேன் ஏரி (Methane lake in Titan planet)
 
தற்போது நிலவில் நீர் இருப்பதும், செவ்வாயில் முன்பு பூமியைப் போல் பெரும் நீர்க் கடல்கள் இருந்ததும், வீனஸில் நீர்க் கடல்கள் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளன. அதில் இருந்து தப்பிப் பிழைத்த உயிரினங்கள் இன்னமும் அவற்றின் அடியாழத்தில் வசிக்கலாம். ஜூபிடரின் நிலவான யுரோபாவின் பனிப் பாளத்துக்கு அடியே உள்ள நீர்க் கடலில் உயிர்கள் இருக்கலாம்.
 
இந்தக் கண்டுபிடிப்புகள், ஆஸ்ட்ரோபயாலஜி துறைக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்துள்ளன. நம் வாழ்நாளுக்குள் ஏலியன் உயிரினம் ஒன்றை விஞ்ஞானம் கண்டறியும் வாய்ப்பு நெருங்கி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்