கொட்டட்டும் மகளிர் முரசு!

வெள்ளி, 25 ஜனவரி 2008 (13:04 IST)
webdunia photoWD
நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளைக் கடந்து விட்டது. அரசியல் சாசன சட்டம் நிறைவேற்றப்பட்டு, குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டு 58 ஆண்டுகள் ஆகி விட்டன.

ஆங்கிலேயர்களிடம் இருந்து அடிமைத் தளையை விலக்கி, சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆனந்தக் கூத்தாடி, நமக்கே நாம் சட்டங்களை வகுத்து, அதனை செயல்படுத்திய நாளையே ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.

ஆண்டுதோறும் வழக்கம்போல் தலைநகர் டெல்லியில் அலங்கார அணி வகுப்புடன் கொடியேற்றுதல், விருது வழங்கல், மாநில தலைநகரங்களில் கொடியேற்றுதல் போன்ற சம்பிரதாயக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன.

மகளிர் மேம்பாடு, மகளிருக்குக் கல்வி, பெண்கள் தேசிய ஆணையம் என பலவாறு மேம்பாட்டுத் திட்டங்களை தற்போது மத்தியில் உள்ள அரசானாலும், முந்தைய அரசுகளானாலும் செயல்படுத்தி வந்தாலும், நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் என்பது ஒருமித்த கருத்தை எட்ட முடியாத - எட்டாக் கனியாகவே தொடர்ந்து நீடிப்பது தான் இந்த குடியரசு தின விந்தைச் செய்தி.

வீட்டில் ஆளும் இல்லத்தரசிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகளில் அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பஞ்சாயத்து ராஜ் முறையை நடைமுறைப்படுத்தினார் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. வீடாளும் மகளிர் அதிக அளவில் நாடாளும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரின் கனவாக இருந்தது.

பின்னாளில் அதுவே மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்கக் கூடிய மசோதாவிற்கு வித்திட்டது என்றால் மிகையில்லை.

நாடாளுமன்றங்களிலும், மாநிலங்களின் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அந்த மசோதா ஏனோ கானல் நீர் போலவே இன்னமும் காட்சியளிக்கிறது.

வெளிப்படையாக மகளிர் மசோதாவை தாங்கள் ஆதரிப்பதாகக் கூறிக் கொள்ளும் மிகப்பெரிய அரசியல் கட்சிகள் கூட உள்ளூர அம்மசோதா நிறைவேறினால் என்னவாகுமோ என்ற கலக்கத்தில் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இதில் தேசிய, மாநிலக் கட்சிகள் என எந்தப் பாகுபாடும் இல்லை.

இதற்கு சமீபத்திய சான்றாக மகளிர் மசோதாவை தாங்கள் கைவிடப்போவதாக பா.ஜ.க. அறிவித்தது.

ஒவ்வொரு பேட்டியின் போது மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சரோ இந்த மசோதா எதிர்வரும் அல்லது நடப்புக் கூட்டத்தொடரில் நிறைவேறிவிடும், அதற்கான ஒருமித்த கருத்தினை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்.

ஆனால் மசோதா என்னவோ கிடப்பில் போட்டது போட்டதுதான். நாடாளுமன்றத்தில் எந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக இருக்கிறது என்றால், மகளிர் மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றன எனலாம்.

ஆண்டுகள் பல போனாலும், குடியரசு தினக் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றாலும், மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னரே குடியரசு தினம், மகளிர் முரசு கொட்டும் தினமாக அமையும் என்பதை மறுக்க முடியாது.

வெப்துனியாவைப் படிக்கவும்