குடியரசு ஆட்சியில் இரண்டுபட்ட இந்தியா!

வெள்ளி, 25 ஜனவரி 2008 (19:05 IST)
webdunia photoWD
இந்நாடும், மக்களும் சந்தித்த எண்ணற்ற பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி, தீர்வுகள் எட்டப்படுவதற்கு தனது வாதத்தின் மூலம் வழியமைத்தவர் இரா.செழியன். முழுமையாக படித்தாகவேண்டிய இக்கட்டுரையில் நமது குடியரசின் நோக்கத்தையும், நாட்டின் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார் சிறந்த நாடாளுமன்றவாதி என்று பெயர் பெற்ற இரா.செழியன்.

- ஆசிரியர்.

குடியரசு ஆட்சியில் இரண்டுபட்ட இந்தியா!

1947, ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த நன்னாள். அதன்பிறகு நாட்டின் ஆட்சி முறையைத் தீர்மானிக்க அரசியல் நிர்ணய சபை நியமிக்கப்பட்டது. 1946 டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி 1950 ஜனவரி 25 ஆம் தேதி வரை பணியாற்றி உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்துடன் அதற்கு மறுநாள் அதாவது 1950 ஜனவரி 26 ஆம் நாள் அன்று இந்தியக் குடியரசு தொடங்கியது. அதனையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி 26 குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் குறிக்கோள், வழிமுறைகள் பற்றிய தீர்மானத்தை இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் 1946, டிசம்பர் 13 ஆம் நாளன்று அரசியல் நிர்ணய சபையில் முன்வைத்து அடிப்படையான விவாதத்தைத் தொடங்கினார். அந்தத் தீர்மானத்தில் 'இந்தியா ஒரு விடுதலை பெற்ற, இறையாண்மையுடைய குடியரசு' (Independent sovereign Republic) என்று கூறப்பட்டது. ஆயினும், பின்பு பல ஆலோசனைகளும், திருத்தங்களும் தரப்பட்டபின்பு அரசமைப்புச் சட்டத்தின் முன்வடிவத்தை நிர்ணய சபையின் விவாதத்திற்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் முன்வைத்தபொழுது, இந்தியாவின் அரசியல் அரசமைப்பு ஓர் 'இறையாண்மையுடைய மக்களாட்சியின் குடியரசு' (Sovereign Democratic Republic) என்று கூறப்பட்டது.

ஆயினும், 1975 ஜூன் 25 ஆம் தேதி பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடிக் காலத்தில், இந்திரா காந்தி அரசாங்கம் கொண்டுவந்த 42வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம், அரசமைப்புச் சட்ட முகப்புரையில், 'சமதர்ம, மதர்சார்பற்ற' எனும் சொற்கள் சேர்க்கப்பட்டன. அதன்பிறகு, முகப்புரையில், இந்தியா ஓர் 'இறையாண்மையுடைய, சமதர்ம, மதசார்பற்ற, மக்களாட்சி முறையின் குடியரசு' (Sovereign Socialist Secular Democratic Republic) என்பது 1977 ஜனவரி 3 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

இவ்வாறு, இந்தியாவின் குடியரசு முறைக்குப் பல்வேறு பண்புகள் தரப்பட்டன, வளர்க்கப்பட்டன. இவற்றில் இந்தியக் குடியரசு எந்த அளவிற்கு விரிவடைந்தது, சிறப்பு பெற்றது என்பதை நாம் கவனிக்கலாம்.

தனிப்பட்ட மனிதனுக்குப் பிறப்பிலே சில குறைபாடுகள் இருந்தாலும், நல்லதொரு பெயரைத் தருவதால் அவனுடைய உடல்நலத்தை அதன்மூலம் நிறைவுபடுத்திவிட முடியாது. கண் பார்வை இழந்தவனுக்குச் 'செந்தாமரைக் கண்ணன்' என்ற பெயர் வைப்பதால் அவனுக்கு ஒளிமிக்கக் கண் பார்வையைத் தந்துvsட முடியாது. ஏழைக் குடும்பத்தில் பிறந்தவனுக்குக் குபேரமூர்த்தி என்று பெயர் சூட்டுவதால் அவன் கோடிசுவரராக ஆகிவிடுவதில்லை. அதைப்போல், ஒரு நாட்டுக்குப் பல்வேறு பண்பாடுகளை அடுக்கி வைப்பதால் மட்டுமே அந்த நாட்டை வளம்படுத்திவிட முடியாது.

1977இல் சமதர்ம நாடாக இந்தியாவின் குறிக்கோள் எழுதிவைப்பட்டது. அவ்வாறு சமதர்ம நாடு என்று இந்தியாவை அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் நிர்ணய சபையில் எழுப்பப்பட்டது. 1946, டிசம்பர் 13 ஆம் நாளன்று அரசமைப்புச் சட்டத்தின் குறிக்கோள் - வழிமுறைகளைப் பற்றிப் பிரதமர் நேரு பேசிய பொழுது அதைக் குறிப்பிட்டார்: "இந்தத் தீர்மானத்தில் சிலர் சமதர்ம நாடாக இந்தியா குறிப்பிடப்பட வேண்டும் என்று கூறினார்கள். நான் சமதர்மத்துக்காகப் பாடுபடுவேன். இந்தியாவில் சமதர்மம் நிறைவேறும் என்று நான் நம்புகிறேன். சரியான மக்களாட்சி முறையில் இயங்குகிற ஒரு நாடு சமதர்ம நாடாக ஆகிவிடும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இன்னும் கூறப்போனால் உலகில் ஒவ்வொரு நாடும் சமதர்மக் குறிக்கோளை நோக்கிச் செல்லும் என்று நான் நினைக்கிறேன். எல்லோருக்கும் பிடித்தமான ஒரு முடிவை நாம் இப்பொழுது எடுக்க முடியாது. இந்தத் தீர்மானம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் அமைய வேண்டும் என்பதால், சமதர்மக் குறிக்கோளை இங்கு வலியுறுத்த வேண்டாம் என நான் நினைக்கிறேன்."

சமதர்மவாதியாகத் தம்மைக் குறிப்பிட்டுக் கொண்ட ஜவஹர்லால் நேரு அவர்களே குடியரசு முறையில் நாடு நன்கு செயல்பட்டால் அதுவே சமதர்ம நாடாக ஆகிவிடும் என்று நம்பினார். 1948இல் அரசாங்கத் தொழில் கொள்கையை வகுத்த பொழுது, 'to be interpreted in terms of the socialistic objective' அதாவது, 'சமதர்மக் குறிக்கோளை வலியுறுத்தும் வகையிலான திட்டம்' என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினார். 1955 ஜனவரி 21 ஆம் நாள் ஆவடியில் யூ.என். தேபர் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் 'Socialistic Pattern of Society' - அதாவது, சமுதாயத்திற்குச் சமதர்ம முன்மாதிரியான குறிக்கோள்' பற்றி தீர்மானத்தை ஜவஹர்லால் நேரு முன்மொழிந்து பேசினார், அதனைக் காமராஜர் வழிமொழிந்தார். தீர்மானம் முழுமனதாக மாநாட்டில் நிறைவேறியது.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சமதர்மம் பற்றிய குறிப்பு இல்லை என்றாலும், அரசாங்கக் கொள்கை அறிவிப்பிலும் ஐந்தாண்டுத் திட்ட அமைப்பிலும், கட்சியின் கொள்கை விளக்கத்திலும், நடைமுறையிலும் சமதர்ம முறையை ஏற்று ஜவஹர்லால் நேரு செயல்பட்டார். ஆனால், 'சமதர்ம நாடு' என்று அழைக்கப்பட்டதால்தான் இந்தியாவில் சமதர்மம் நிலைபெறும் என்று அவருக்கு அடுத்து வந்த தலைமுறையினர் நினைத்தார்கள் போலிருக்கிறது. 1975 நெருக்கடிக் காலத்தில் இந்திரா காந்தியின் அரசாங்கம் ஓர் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் "சமதர்ம, மதர்சார்பற்ற" என்ற சொற்களை அரசமைப்புச் சட்ட முகப்புரையில் சேர்த்தது. சமதர்மம் எனும் சொல் சேர்க்கப்பட்டதாலேயே, அதன்பிறகு சமதர்ம அடிப்படையில் அரசாங்கத் திட்டங்களும் செயல்பாடுகளும் இருந்தன என்று கூறமுடியாது. மாறாக, நாட்டில் சமதர்மக் குறிக்கோளும் குடியரசு முறையும் ஆண்டு தோறும் நலிவடைந்து கொண்டே வந்தன.

நேரு காலத்தில் முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களும் சமதர்ம முன்மாதிரியில் தீட்டப்பட்டன. ஆனால் நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் (1974 - 1979) "சமுதாய பொருளாதாரத் துறைகள் ஜனநாயக முறையில் அமைக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது. சுருங்கச் சொன்னால், சந்தைப் பொருளாதாரத்தை அது பின்பற்றியதாக இருந்தது. 1980இல் அறிவிக்கப்பட்ட தொழிற்துறை கொள்கையின் கீழ், பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட பல தொழில்கள் தனியார் துறைக்கு மாற்றப்பட்டதுடன் அவற்றுக்கு விதிக்கப்பட்ட வரம்புகளும் உயர்த்தப்பட்டன. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பதாக 1991இல் நரசிம்மராவ் - மன்மோகன் சிங் அரசாங்கம் தனியார் துறைக்கும் வெளிநாட்டு மூலதனத்துக்கும் இருந்த கட்டுப்பாடுகளை நீக்கி, சந்தைப் பொருளாதாரத்திற்கு ஆதரவு தந்து உலகமயமான பொருளாதாரம் இந்தியாவிற்குள் ஏற்றம்பெற வழிமுறைகள் தரப்பட்டன. சமதர்மக் குடியரசு என்பது வெறும் அர்த்தமற்ற குறிக்கோளாக ஆகிவிட்டது.

வளர்ச்சிதான்... எங்கு வளர்ச்சி?

குடியரசு நாடான இந்தியாவில் வளர்ச்சி ஏற்படாமல் இல்லை. முதலாவதாக, இந்தியாவின் மொத்த உற்பத்தியின் மதிப்பு 1950-51இல் ரூ.1,40,466 கோடி என இருந்து, 2004-05இல் ரூ.22,22,591 கோடி என உயர்ந்துள்ளது. 2003 முதல் 2007 வரையுற்ற நான்காண்டுகளில் மொத்த உற்பத்தி ஆண்டு வளர்ச்சி 7.5 சதவிகிதத்திலிருந்து 9.2 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இது 2007-08இல் 10 சதவிகிதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2001இல் 39 பில்லியன் டாலர் ஆக இருந்த வெளிநாட்டு மூலதன வரவு 2007 ஆம் ஆண்டில் 200 பில்லியன் டாலரைத் தாண்டிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டுத் தொடர்பு கணினி சந்தையில் இந்தியா முதலிடத்தைப் பெற்று 50 பில்லியன் டாலர் வருமானத்தைச் சென்ற ஆண்டு அடைந்தது.

உலக அளவில் செல்வம் மிக்க சீமான்கள் - பில்லியன் டாலர் (ரூபாய் மதிப்பில் 4,000 கோடி) உடையவர்களில் பட்டியலில் இந்தியாவில் உள்ள பில்லியனர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 2006இல் 36 என்ற அவர்களின் எண்ணிக்கை 2007இல் 40 ஆக உயர்ந்தது. ஜப்பான் (24) சீனா (17) ·பிரான்ஸ் (14) இத்தாலி (14) ஆகிய பல நாடுகளை விட இந்தியா வளர்ந்துள்ளது பில்லியனர் எண்ணிக்கையில். அதிலும் 2007 இல் இந்தியர்களில் லட்சுமி மிட்டல் என்பவர் 51 பில்லியன் டாலர் (2,00,000 கோடி ரூபாய்), முகேஷ் அம்பானி 49 பில்லியன் டாலர் (1,96,000 கோடி ரூபாய்), அவர் தம்பி அனில் அம்பானி 45 பில்லியன் டாலர் (1,80,000 கோடி ரூபாய்) என்று சொத்துகளின் அளவில் தொழில் நிறுவனங்களைப் பெற்றிருந்தனர். அண்மையில் அனில் அம்பானி புதிதாக ரிலையன்ஸ் பவர் கம்பெனி ஒன்றை ஆரம்பிக்க 22.8 கோடி ரூபாய்க்குப் பங்குகளை வெளியிட்டார். அதற்கு 1,662 கோடி ரூபாய் அளவிற்குப் பங்குகளை வாங்க பலர் முன்வந்துள்ளனர். அவற்றை அப்படியே அவர் ஏற்றுக்கொண்டால் அனில் அம்பானியின் தொழில் அமைப்பின் மொத்த வலிவு 60 பில்லியன் டாலரைத் தாண்டி, இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் முதல் வரிசையில் அவர் முக்கிய செல்வந்தராக ஆகிவிடுவாராம். அம்பானி சகோதரர்களின் சொத்துக் குவியல்களைப் பார்த்தால் பிரமிப்பு உண்டாகும். அரசியலில் இருப்பதைப் போல குடும்ப முதலாளித்துவ பாரம்பரியமும் வளர்கிறது.

இந்தியாவின் மொத்த உற்பத்தி வேகமாகப் பெருகி வந்தாலும், உலகச் செல்வச் சீமான்கள் பட்டியலில் இந்தியச் செல்வந்தர்களுக்குப் பெருமைப்படத்தக்க இடங்கள் கிடைத்தாலும், சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் எந்த நிலையில் உள்ளது எனபது கவனிக்கப்பட வேண்டும்.

ஒரு நாடு வளர்ந்திருக்கிறது என்றால், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கை வளம் பெற்றதாக, உடல் நலம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைத் தேவைகள் உரிய அளவில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

நமது நாட்டின் நிலை!

பொதுவான சுகாதார நிலைமையை எடுத்துக்கொண்டால், உலக அளவில் 16 கோடி குழந்தைகள் குறைவான உடல் எடையுடன் பிறக்கின்றன. அதில் ஐந்தரைக் கோடி (அதாவது மூன்றில் ஒரு பகுதி) இந்தியாவில் பிறக்கின்றன. இன்னும் மோசமான நிலைமை, பிறந்த 20 நாட்களுக்குள் உலகெங்கும் இறந்துபோகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதி இந்தியக் குழந்தைகளாகும்.

பிறக்கும் குழந்தைகள் இறக்கின்றன என்றால், இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே சாகடிக்கப்படுவதும் அடங்கும். அத்துடன் குழந்தைப் பேறில் தக்க பாதுகாப்பின்றித் தாய்மார்களும் இறந்துவிடுகிறார்கள். இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில், பெண்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அந்த விவரங்கள்படி, மக்கள்தொகையில் 1000 ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களின் எண்ணிக்கையைக் கவனித்தால், 1901இல் 972, 1951இல் 946, கடைசியாக 2001இல் 933 என இருக்கின்றன.

குடியரசுமுறை திறம்பட நடைபெறுவதற்குக் குடிமக்களுக்குக் கல்வி அறிவு முக்கியமானது. இந்திய அரசமைப்புச் சட்டம் தொடங்கிய 10 ஆண்டு காலத்திற்குள் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கெல்லாம் கட்டாய இலவசக் கல்வி தருவதற்கு அரசாங்கம் பாடுபட வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி 1961, ஜனவரி 25 ஆம் தேதிக்குள் கட்டாய இலவசக் கல்வி அனைத்துச் சிறுவர்களுக்கும் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இது நிறைவேறாமல், பல பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன. ஆண்டுதோறும் நாட்டின் மொத்த உற்பத்தி அளவில் 6% கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்று 1965 ஆம் ஆண்டு கோத்தாரி கல்விக் குழு பரிந்துரை செய்தது. ஆனால் இதுவரை நாட்டு உற்பத்தி அளவில் 4% குறைவாகத்தான் அரசாங்கத்தின் கல்விக்கான செலவு இருக்கிறது. மேலும், ஆரம்பப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்படும் 100 மாணவர்களில் ஐந்தாம் வகுப்புக்கு 40 மாணவர்களும், எட்டாம் வகுப்புக்கு 23 மாணவர்களும், பத்தாம் வகுப்புக்கு 14 மாணவர்களும் செல்வதாகத் தெரிகிறது. 17 முதல் 24 வயதினரில் 6% மாணவர்களால்தான் கல்லூரிப் படிப்பிற்குச் செல்ல முடிகிறது.

இந்திய‌‌ப் பொருளாதார வளர்ச்சியில் கிராமப்புரங்கள், விவசாயம் ஆகியவை மிகவும் புறக்கணிக்கபட்டுள்ளன. குடியரசு ஆட்சிமுறையை அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தபோது அதைச் செம்மையாகச் செய்யவில்லை என்று மஹாத்மா காந்தி கருதினார். 1946, ஜூன் 22 ஆம் தேதியிட்ட தமது ‘ஹரிஜன்’ பத்திரிக்கையில் காந்தியார் பின் வருமாறு எழுதினார்: “இந்தியாவின் சுதந்திரம் அடிப்படையான கிராமங்களிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாக அல்லது பஞ்சாயத்தாக முழு அதிகாரத்துடன் விளங்க வேண்டும்…”

விவசாயத்தின் வீழ்ச்சி!

1951 இல் விவசாயத்தை நம்பியிருந்த 72% மக்கள், இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 59% பங்கைப் பெற்றிருந்தனர். ஆனால், 2006-2007 நிலைமைப்படி மொத்த மக்கள் தொகையில் 60% உள்ள விவசாயிகள், நாட்டின் மொத்த உற்பத்தியில் 22% அளவைத்தான் பெறுகிறார்கள். உலகளாவிய பொருளாதாரத்தின் மூலம் இந்தியாவின் வருமானம் பெருமளவில் பெருகியிருக்கிறது என்றாலும், 1994 -2004 காலகட்டத்தில் இந்தியாவில் ஒரு லட்சம் விவசாயிகள் வருமானம் இல்லாமல் வறுமையில் தள்ளப்பட்டு, கடன் தொல்லை தாங்கமல் கடைசியாகத் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. கழனி திருத்தி. சேற்றில் அழுந்தி, செந்நெல்லைக் குவித்து, நாட்டுக்கு உணவு படைத்த உழவர்கள், உணவில்லாமல் பஞ்சத்துடன், பசியுடன் போராடிக் கடைசியில் முழக்கயிறுதான் முடிவு என்று வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள். இறந்தவர்கள் மட்டுமல்ல, அவர்களால் விட்டுச்செல்லப்பட்ட ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நாட்டின் குடியரசு ஆட்சி எத்தகைய உதவியையும், பதுகாப்பையும் தந்த்தாகத் தெரியவில்லை.

முடிவாக நிறைவேற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை 1949, நவம்பர் 25 ஆம் தேதி அரசியல் நிர்ணயசபை முன் வைக்கும்பொழுது டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் கூறியதாவது: “அரசியலில் சமத்துவம் என்பது வகுக்கப்பட்டாலும் சமுதாய. பொருளாதாரத் துறைகளில் ஏற்றத்தாழ்வுகள் பலமாக இருக்கின்றன. இந்த நிலைமை நீடித்தால் எவ்வளவு காலத்திற்கு அரசியலில் மக்களாட்சிமுறை நீடிக்கும் என்பது தெரியவில்லை. இந்த முரண்பாடுகளைப் போக்கினாலொழிய அழுத்தப்பட்டிருக்கும் மக்கள் வெடித்தெழுந்து கிளம்பி நாம் தருகிற அரசியல் அமைப்பைச் சுக்குநூறாகச் சிதறடித்துவிடுவார்கள்.

இரண்டு இந்தியாக்கள்!

நாட்டின் மொத்த உற்பத்தியின் மதிப்பீடுகள் வளர்ந்தன என்றாலும், கிராமப்புரங்கள் புறக்கணிக்கப்பட்டு நகர்ப்புரங்கள் விரிவடைந்தன. விரிவடைந்த நகரங்கள்கூட செம்மைப்பட வளரவில்லை. மும்பை நகரத்தின் மக்கள் தொகை 1 கோடி 60 லட்சத்துக்கு மேல் வளர்ந்துவிட்ட நிலையிலும் அங்குள்ள சாக்கடை ஒரத்தில், சேற்றில், முடங்கிக்கிடக்கும் ஏழைகளின் அளவு 54%க்கு மேல் இருக்கிறது. 1 கோடி 40 லட்சம் மக்களையுடைய டெல்லியில் 45% மக்கள் சேரிகளில் வசிக்கிறார்கள். இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரும், அரசியல் தலைநகரும் சேரிகள் சூழ்ந்த நரகங்களாக விளங்குகின்றன.

1947இல் இந்தியத் துணைக் கண்டம் இரண்டாகப் பிளவுபட்டு இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் விடுதலை பெற்றன. 1970இல் பாகிஸ்தான் இரண்டாக உடைந்து கிழக்கில் பங்களாதேஷ் தனி நாடாக ஆனது.
இந்தியா என்பது ஒரே அரசமைப்புச் சட்டத்திறகுள் ஒரு நாடாக விளங்கிய போதிலும் நடைமுறையில் இந்தியாவிற்குள் இரண்டு இந்தியாக்கள், ஏழை இந்தியா - பணக்கார இந்தியா, கிராம இந்தியா - நகர இந்தியா என பிளவுபட்டு இருக்கின்றன. இரண்டு பிரிவுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் ஆண்டுதோறும் வளர்ந்துகொண்டே போகின்றன.

இந்திய நாட்டில் மண் வளம் நிரம்ப இருக்கிறது. இந்தியக் குடியரசின் ஆட்சி வளமும், மக்களின் மன வளமும் இன்னமும் செம்மைப்படவில்லை! குடியரசு நாளைக் கொண்டாடும் நேரத்தில், உலகம் பார்த்து மெச்சக்கூடிய, நாம் பார்த்துப் பெருமைப்படக்கூடிய குடியரசு நாடு ஆக இந்தியா பாடுபடவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்