எவரெல்லாம் உண்மையான குடிமக்கள்?

வெள்ளி, 25 ஜனவரி 2008 (16:30 IST)
webdunia photoWD
குடியரசு தினம்... இந்நாளை கொண்டாடும் வேளையில், நம்மில் எத்தனை பேர் உண்மையான குடிமக்களாக இருக்கிறோம் என்பதை ஒருகணம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

நாட்டில் சுமார் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான மக்களே உண்மையான குடிமக்களாக இருக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். காரணம், இந்த எண்ணிக்கையிலானோர் மட்டுமே தங்களது வாக்குகளைத் தேர்தல்களில் பதிவு செய்கின்றனர். ஏனையோர் அந்த நாளை விடுமுறையாகக் கருதி உல்லாசமாக கழிப்பதிலேயே நாட்டம் காட்டுகின்றனர்.

தேர்தல்களை எவரெல்லாம் உதாசீனப்படுத்துகிறார்கள் என்று பார்ப்போமானால், கல்வியறிவு கிடைக்கப் பெறாத, வறுமைக்கோட்டுக்கும் கீழேயுள்ள ஏழைகள் அல்ல; மாறாக, கற்றறிந்த சான்றோர் என்று பேச்சளவில் சொல்லிக்கொள்ளும் பணக்கார வர்க்கத்தில் 'பெரும்பாலானோரே' என்பது தெளிவு.

குறிப்பாக, கிராமப் பகுதிகளைக் காட்டிலும், நகர் பகுதிகளிலேயே அதிக அளவிலான கடமையுணர்வில்லாதோர் இருக்கின்றனர்.

உதாரணத்துக்கு கடந்த 2006-ல் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலை எடுத்துக்கொள்வோம். இதில், சென்னை - துறைமுகம் தொகுதியில் மொத்தம் 60,011 பேர் மட்டுமே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையோ 1,05,115! வாக்களிக்காதோர் எண்ணிக்கை 45,104!

சரி... இதே தேர்தலில் கிராமங்கள் நிறைந்த வேதாரண்யம் தொகுதியைப் பார்ப்போம். இதன் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,59,520. வாக்களித்தோரின் எண்ணிக்கை 82.91 விழுக்காடு; அதாவது, 1,32,251 பேர்!

இந்த ஒப்பீட்டில் இருந்தே தெரிந்துவிடும் யாரெல்லாம் பொறுப்புணர்வு மிக்க குடிமக்களாக இருக்கிறார்கள் என்பது!

webdunia photoWD
சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி... பொறுப்புணர்வுடன் தங்களது வாக்குகளைப் பதிவு செய்பவர்களில் பெரும்பான்மையானோர், நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்கும் கீழேயுள்ள குடிமக்களே என்பதை மறுக்க இயலாது.

இதனால்தான், ஆட்சிப் பொறுப்பேற்கும் எந்த அரசும் தே.மு (தேர்தலுக்கு முன்) - தே.பி (தேர்தலுக்குப் பின்) என்ற இரு வேறு கொள்கைகளைக் கைவசம் வைத்துள்ளன.

அதன்படி, கடமையுணர்வுடன் வாக்களிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை தே.மு.வில் கண்டுகொள்கிறது. அவர்களுக்கு வாக்குறுதிகளை தாராளாமாக வழங்கி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது.

பின்னர், ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளோரைக் கண்டுகொள்கிறது அரசு. தே.பி.யில் தொழிலதிபர்களும், செல்வந்தர்களும் பயனடையும் வகையிலான சலுகைகளை வாரி வழங்குகிறது.

இதனால், கண்டுகொள்ளப்படாத விவசாயிகள் தங்களது வாழ்க்கையை முடித்துக்கொண்டு தீர்வு காண்கின்றனர். கடந்த 1997-ல் இருந்து 2005 வரை மட்டும் இந்தியாவில் 1,49,244 விவசாயிகள், கடன் தொல்லை, வேளாண்மைப் பொய்த்துப் போவது, வறுமை உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த கணக்கு, மத்திய அரசின் குற்றப்பதிவுத் துறை மூலமே அறியப்படுகிறது.

தே.பி.யில் விவசாயிகள் கண்டுகொள்ளப்பட்டிருந்தால், இத்துயரங்கள் நடப்பதை வெகுவாகத் தவிர்க்க முடியும். ஆனால், தொழில்துறையைக் கண்டுகொண்டால்தானே நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்றமடையும் என்ற நோக்கத்தில் செயல்படும் அரசுக்கு இது பொருட்டாக இருக்க வாய்ப்பில்லை.

அதேநேரத்தில், இத்தகையை சர்ச்சைகள் கிளம்பும்போதெல்லாம் சாக்கு போக்குகள் சொல்லிச் சமாளித்துக் கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளும் காரணங்களை தங்கள் பாக்கெட்டில் எப்போது வைத்துள்ளனர்.

webdunia photoWD
இதற்குத் தீர்வு என்ன என்பது குறித்து ஆராய்வதைத் தவிர்த்து, முதலில் உண்மையான குடிமக்களாக நமது கடமையை முதலில் செய்வோம். அதாவது, தேர்தலில் வாக்களிப்போம். அதன்பின், அரசு தன் கடமையைச் செய்யும் என எதிர்பார்ப்போம்.

ஆனால், 'எந்தக் கட்சியும் எனக்குப் பிடிக்கவில்லை'; 'எந்த வேட்பாளர்களும் சரியில்லை' என்று கற்றறிந்த சான்றோர்கள் பலர் நொண்டிச் சாக்குகள் சொல்லக்கூடும். தேர்தலில் வாக்களிக்க விரும்பாதோரும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது.

அத்தகையோர் பலருக்கும் '49 ஓ' என்பது குறித்த அறிதல் இருக்கும் என்பது நம் நம்பிக்கை. அதாவது, எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தால், அதற்காகவுள்ள 17 ஏ-வுக்கான பதிவேட்டில், நமது பெயர் உள்ளிட்ட விவரங்களைக் குறித்துக் கொள்ளப்படும். அதில் கையெழுத்திட்டால் போதும், நமது வாக்கு 49 ஓ-வில் பதிவாகிவிடும்.

இதனால், குடிமகனுக்குரிய கடமையாற்றுவதற்கு வழிவகுக்கப்படுகிறது. ஒருவேளை, ஒரு தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒவ்வொருவரைக் காட்டிலும் '49 ஓ'-வில் வாக்குகள் மிகுதியாக பதிவாகியிருந்தால்..?

அந்தத் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெறும். அதில், முன்பு போட்டியிட்ட வேட்பாளர்கள் எவரும் பங்கேற்க முடியாது.

இதுபோல நடந்தால், 'மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு, உரிய சேவையாற்ற வேண்டியது அவசியம்' என்னும் கட்டாயத்தை ஒவ்வோரு வேட்பாளரும் உணர்வர்.

எனவே, அடுத்து வரவிருக்கும் தேர்தல்களிலாவது வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் தங்கள் முழுமுதற்க் கடமையை நிறைவேற்ற வேண்டுவோமாக!