அடிப்படை உரிமை விழிப்புணர்விற்கு கல்வி அவசியம்!

வெள்ளி, 25 ஜனவரி 2008 (19:00 IST)
அரசமைப்புச் சட்டத்தில் நமக்கு அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் அரை நூற்றாண்டு‌க் காலம் கடந்துவிட்ட நிலையில் எந்த அளவிற்கு நிலைநாட்டப்பட்டுள்ளது? ஒரு காவல் அதிகாரியாக நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

ஆர். நடராஜ்
தமிழக காவல் கூடுதல் தலைமை இயக்குனர்
மாநில மனித உரிமைகள் ஆணையம் - தமிழ்நாடு

webdunia photoWD
இதற்கு காவல்துறை அதிகாரியாக மட்டுமல்ல, இந்திய பிரஜை என்ற முறையிலும் இதற்கு நான் பதில் கூற முடியும். இந்திய அரசியலமைப்புதான் உலகத்திலேயே எழுதப்பட்ட மிகப்பெரிய அரசியல் சாசனம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனிலும் சரி, அமெரிக்காவிலும் சரி எழுதப்பட்ட அரசியல் சாசனம் மிகக் குறைவுதான்.

நம்முடையது எல்லாமே வரையறுக்கப்பட்டு அளிக்கப்பட்ட சாசனம். சிந்தனையாளர்கள், மாபெரும் தலைவர்கள் இயற்றிய சாசனம் அது.

இந்தியாவில் சட்டமும் திட்டமும் நல்லபடியாகத்தான் உள்ளது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில்தான் பல சிக்கல்கள் உள்ளன. அதாவது இந்திய அரசியல் சாசனத்தில் எல்லாமுமே அடங்கியுள்ளது. அதில் எந்தக் குறையும் இல்லை.

அதற்கு ஒரே ஒரு உதாரணம், பத்து ஆண்டுகளுக்குள் எல்லாருக்கும் கல்வி அறிவு என்ற ஒரு இலக்கு டாக்டர் அம்பேத்கார் நிர்ணயித்துள்ளார். ஆனால் மில்லினியம் தாண்டிய பின்னரும் அந்த இலக்கை எட்டவில்லை. அது அடிப்படை உரிமையில் கல்வி உரிமையை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்படி 2004ஆம் ஆண்டு 21 ஏ பிரிவில் துவக்கக் கல்வி என்பது அடிப்படை உரிமையில் சேர்த்தோம். அதாவது அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டு 60 ஆண்டுகள் கழித்து இதனை நாம் செய்கின்றோம்.

அதிலும், ஒவ்வொரு மாநில அரசும் வழிமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் அறிவுறுத்தப்பட்டுள்ளதே தவிர, அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான வழிகாட்டல் இல்லை.

நமது பெரும் பிரச்சனையே அறிவின்மைதான்!

இந்திய நாட்டிற்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினை அறிவின்மைதான். நமக்கு என்ன இலக்கு இருக்கிறது, அந்த இலக்கை எப்படி அடையவேண்டும் என்பதை அறிய இயலாமல் போகிறது. அரசியல் சாசனத்தில் நமக்கு என்னென்ன உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளது, சுதந்திர நாட்டில் நாம் எவ்வித உரிமைகளைப் பெறலாம் என்பது பற்றிய புரிதல் இல்லாமல் மக்கள் இருக்கின்றனர். இதுதான் மிகப்பெரிய பிரச்சினை. நமக்குள்ள உரிமையை தட்டிக் கேட்பதற்கு, முதலில் நமக்கு என்ன உரிமைகள் உள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும்.

முதலில் தனி மனித உரிமை பாதுகாக்கப்படுகிறதா? அரசு அலுவலகத்திற்குச் சென்றால் தனி மனிதன் ஒருவன் எவ்வாறு நடத்தப்படுகின்றான் என்பதையும், பெரிய மனிதர் ஒருவர் சென்றால் அவர் எவ்வாறு நடத்தப்படுகிறார் என்பதையும் நாம் பார்க்கிறோம். அதாவது கண்ணியம் காக்கப்படுகிறதா?

கல்வி அறிவு இருந்தால்தான் தங்களுக்குரிய உரிமையை அவர்கள் கேட்டுப் பெற இயலும். அதுவும் சாதாரணக் கல்வி அல்ல. தரமானக் கல்வி பெறுதல் அவசியம்.

சமீபத்தில் ஒரு நேர்காணலைக் கண்டேன். இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் நேர்காணல் அது. அதில், இந்தியாவின் மிக முக்கியப் பிரச்சினை என்பது அடிப்படைக் கல்வி மக்களுக்கு சரியாகச் சென்று சேரவில்லை. இதில் தனி நபர்கள் ஏன் பங்கேற்கக் கூடாது. பெரிய மனிதர்கள் தாங்களாக முன் வந்து இதற்காக பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

அடிப்படைக் கல்வி அறிவு மனிதர்களுக்குச் சென்று சேர வேண்டியதுதான் மிக மிக முக்கியம். அதில்தான் எல்லாமே அடங்கியுள்ளது.

உயிர், உடமை, சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் ஆகியவற்றை பாதுகாப்பதுதான் அரசியல் சாசனத்தின் முக்கியப் பணி.


அதாவது இந்திய குடிமக்களின் உயிர், உடமைகள், அவரது சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் ஆகியவற்றை பாதுகாக்கவே இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியல் சாசனத்தில் மட்டும்தான் உடமைகளைப் பாதுகாக்கவும் வழிவகைக் காணப்பட்டுள்ளது.

எனது உடமைக்கு ஏதேனும் குந்தகம் ஏற்பட்டால் அதற்கு வழி காண நான் சட்டத்தை அணுக முடியும். மற்ற நாடுகளில் இந்த வசதி கிடையாது. உயிரைப் பாதுகாக்க மட்டுமே சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

உயிர், உடமையை பாதுகாக்க இந்திய அரசியல் சாசனத்தில் இடம் இருக்கிறது. ஆனால் அது நடைமுறையில் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அதில் ஒரு தொய்வு நிலை உள்ளது. ஒரு இடைவெளி இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் அறிவின்மைதான். இந்தியாவில் 70 விழுக்காடு 80 விழுக்காடு கல்வி அறிவு உள்ளது என்று கூறிக் கொள்கிறோமே தவிர, எத்தனை பேருக்கு தங்களது அடிப்படை உரிமை, அது பறிக்கப்படும்போது தட்டிக் கேட்க வேண்டும் என்ற பொது அறிவு இருக்கிறது என்று பார்த்தால் அது இல்லை.

இப்போதும் எல்லோரும் வாக்களிக்கிறார்களே தவிர, எங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதனை நாங்கள் எவ்வாறு சரி செய்து கொள்வது, அதற்கான வழி முறை என்ன என்பதை மக்கள் கேட்கிறார்களா? யாராவது ஒருவரிடம் போய் உங்கள் வார்டு உறுப்பினர் யார் என்று கேட்டால் அவருக்கு தெரிந்திருக்குமா? இல்லை.

நமது சுற்றுப்புறத்தில் யார் யார் என்னென்ன செய்கிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்கிறோமா இல்லையே, ஏதேதோ தேவையில்லாத பிரச்சினைகளைப் பற்றி எல்லாம் பேசிக் கொள்வோமே தவிர இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

அதனால் சமுதாய நோக்கம் வேண்டும். சமுதாய நோக்கம் தற்போது நலிந்து கொண்டிருக்கிறது. சமுதாய நோக்கம் வேண்டும் என்றால் அதற்கு கல்வியறிவு வேண்டும். மக்கள் தங்களது சமுதாயத்தைப் பற்றி கேள்வி கேட்க வேண்டும். அப்போதுதான் ஆட்சியாளர்கள் உணர்வார்கள். சாலைகள் சரியில்லை, அடிப்படை வசதிகள் சரியில்லை, அரசு நலத்திட்டங்கள் சென்று சேராமல் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது, அரசு அதிகாரிகள் ஊழல், மனித உரிமை மீறல் செயல் என அநேகப் பிரச்சினை உள்ளது. இவற்றையெல்லாம் மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் ஓரளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது உள்கட்டமைப்பு. அதற்காக அங்கிருந்த மக்கள் பலவற்றை தியாகம் செய்தனர். ஆனால் அவர்களது தியாகங்களுக்கெல்லாம் தற்போது பலன் கிடைத்துவிட்டது. நமது பொருளாதார அடிப்படை உள் கட்டமைப்பு பலமாக இருப்பதற்கு நாம் பெருமைப்பட வேண்டும்.

அரசும், நிர்வாகமும் அரசமைப்புச் ச‌ட்ட‌ நோக்கை மக்களிடையே சென்று சேர்க்கத் தவறிவிட்டனவா?

அதாவது சட்டத்தைப் பொறுத்தவரை சட்டமியற்றுவது, அதை நடைமுறைப்படுத்துவது, அதனை மேற்பார்வை செய்யும் சட்டம் என்ற மூன்றும் அவசியமாகிறது.

இதில் செயலாக்கம் என்பது மிக முக்கியம். ஆனால் இதில் மக்களின் விழிப்புணர்ச்சிதான் அடிப்படை. எத்தனையோ பல விஷயங்கள் நல்லபடியாக செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

மக்களின் மத்தியில் எந்த விதமான கருத்து நிலவுகிறது என்பதும் கண்டறியப்பட வேண்டும்.எனவே மக்களிடையே விழிப்புணர்ச்சி இருந்தால்தான் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படும்.

ஆனால் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் இடையே ஒரு இடைவெளி உள்ளது. அதுதான் சட்டம் நடைமுறைப்படுத்தலில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது.

இது கல்வியின் யுகம். இந்தியாவிற்கு ஒரு பரிமாண வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நல்ல வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முக்கியப் பிரச்சினை என்று பார்த்தால் அது கல்வி தான்.