ஏற்றத் தாழ்வைக் களைவோம் : பாபா சாஹேப் அ‌ம்பே‌‌த்கர்!

வெள்ளி, 25 ஜனவரி 2008 (18:59 IST)
webdunia photoFILE
"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாதவையாகும். சமத்துவம் இல்லாத சுதந்திரம் பல பேர் மீது ஒரு சிலர் ஆதிக்கம் செலுத்திட வழி செய்யும். சுதந்திரமில்லாத சமத்துவம் தனி மனிதனின் தன்னெழுச்சியான இயல்புகளை குலைவுறச் செய்யும், சகோதரத்துவம் இல்லாத சுதந்திரமும், சமத்துவமும் இயற்கையாக கொண்டிருக்க வேண்டிய தன்மைகளைப் பெற்றிருக்கமாட்டா. சமூக சமத்துவம், பொருளாதார சமத்துவம் ஆகிய இரண்டும் இந்தியச் சமுதாயத்தில் அறவே இல்லை என்ற உண்மையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்"

நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கி அளித்ததில் அரும்பணியாற்றிய பாபா சாஹேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், அதனை அரசியல் சட்ட அவையில் முன்வைத்து ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது.

சுதந்திர இந்தியா தன்னுள் உள்ள சமூக, சமநிலை அற்ற தன்மையையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் சகோதரத்துவ உணர்வோடு தீர்த்துக்கொள்வதற்கு அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அம்பேத்கர் கூறினார்.

1949 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி அரசியல் சட்ட அவையில் இந்திய அரசமைப்பு சட்டம் மீது எழுப்பப்பட்ட பல்வேறு வினாக்களுக்கு பதிலளித்தும், விளக்கம் அளித்தும் அம்பேத்கர் உரையாற்றினார்.

"1950 ஜனவரி 26 ஆம் நாள் முரண்பாடுகளுடைய ஒரு வாழ்வியல் சூழலில் இந்தியர்களாகிய நாம் அடியெடுத்து வைத்திட உள்ளோம். அப்போது அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற்றிருப்போம். ஆனால் சமூக மற்றும் பொருளாதார வாழ்விலோ சமத்துவமற்ற நிலையைப் பெற்றிருப்போம். வெகு விரைவில் இந்த முரண்பாட்டை நாம் களைந்திட வேண்டும். அப்படிக் களைந்திடத் தவறுவோமானால், இந்த அரசியல் சட்ட அவை அரும்பாடுபட்டு உருவாக்கியுள்ள அரசியல் ஜனநாயகக் கட்டமைப்பையே சமத்துவமின்மையால் பாதிப்பிற்கு ஆளாகிறவர்கள் அடியோடு தகர்த்து விடுவார்கள்.

நாடு என்ற சொல் உளமார்ந்த உணர்வு நிலையிலும் சமூக நிலையிலும் எந்த அர்த்தத்தில் சொல்லப்படுகிறதோ அதே தன்மையில் இந்தியர்களாக உண்மையில் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்காகச் சமூக வாழ்வில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, ஒரு சாதிக்கும் இன்னொரு சாதிக்கும் இடையே பொறாமையையும் வெறுப்பையும் வளர்த்துள்ள சாதிகளைக் கைவிட வேண்டும்"

அரசமைப்பு சட்ட உருவாக்கக் குழுவின் தலைவராக இருந்து அதனை உருவாக்குவதில் அரும்பாடுபட்ட டாக்டர் அம்பேத்கர், அதனை ஒப்புதலுக்கு அளிக்கும் போது விடுத்த எச்சரிக்கையை இந்த நன்னாளில் நாம் நினைவுகூர்ந்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்