பாம்பன் சுவாமிகள் வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார்.
முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் சென்னை, திருவான்மியூரில் உள்ளது.
அரிது, அரிது மானிடராக பிறத்தல் அரிது' என்று புலவர்கள் எல்லாம் சொல்கிறார்கள். இந்த மனிதப்பிறவி எவ்வளவு நல்ல விஷயமோ அதே அளவிற்கு அஞ்சத்தக்க விஷயமும் ஆகும். ஏனெனில், மனிதர்கள் தங்கள் செய்கையால் இந்த பிறவியை மேலாகவோ, கீழாகவோ செய்கிறார்கள். நல்லதைச் செய்தால் இதைவிட நற்பிறவி கிட்டும். தீமையை செய்தால் மீண்டும் விலங்காகப் பிறக்க வேண்டி வரும்.
ஒரு மனிதனின் தயவைப் பெறுவதற்குக்கூட நீண்டநாள் போராடுகிறீர்கள். அரசாங்கத்தின் தயவு வேண்டுமானால் இன்னும் அதிகநாள் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த சாதாரண ஜென்மங்களுக்கே இப்படி காத்திருக்க வேண்டியது என்றால், கடவுளின் அருளைப் பெறுவதற்கு எவ்வளவுநாள் காத்திருக்க வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே அவரது கருணையைப் பெற பொறுமையுடன் காத்திருங்கள். மிகப்பெரிய பலன் கிடைக்கும்.