பாபாவின் வழிபாட்டு முறையில் ஒன்று, சர்க்கரையில் அக்கறை இல்லா லீலை. ஒரு வியாழக்கிழமை சின்ன டப்பாவில் சர்க்கரையை எடுத்து வைக்க வேண்டும். 21 நாட்களுக்கு எந்த இனிப்பையும் எந்த வகையிலும் சாப்பிடக் கூடாது. எந்நேரமும் பாபாவை மனதார துதித்தபடி இருக்க வேண்டும். மிகச் சரியாக 21ம் நாள் நாம் எதிர்பார்க்கிற இனிப்பான செய்தி நம்மைத் தேடி வரும்.
கல்கண்டு நைவேத்யம் செய்து பரீட்சை எழுதும் மாணவ மாணவியருக்கு அதை பிரசாதமாக அளித்தால், அவர்கள் தேர்வுகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். திருமணத் தடை உள்ளவர்கள் தாமரை மாலையை அவர்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று பாபாவிற்கு சாத்தி 108 நெல் பொரி உருண்டைகளை 108 எளியவர்களுக்கு தானமாக அளித்தால் பாபாவின் திருவருளால் அவர்களுக்கு உடனே திருமணம் நிச்சயமாகிறது.
கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 11 மட்டைத் தேங்காய்களை எடுத்துக் கொண்டு பாபா ஆலயத்திற்குச் சென்று, அவற்றில் 10 தேங்காய்களை ‘துனி’ (அணையா நெருப்பு) முன் வைத்துப் பிரார்த்திக்க வேண்டும். மீதி ஒரு தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதிலிருந்து தமக்குத் தெரிந்த ஏதேனும் இனிப்பைச் செய்து பாபாவிற்கு நிவேதிக்க வேண்டும். பிறகு அதிலிருந்து சிறிதளவு பிரசாதமாக உண்டு, மீதியை தானம் செய்தால் அந்த நோயின் கடுமை நிச்சயம் குறைந்து விடும். நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய் உடையவர்கள் ஒரு வியாழக்கிழமையன்று துனி விரத பூஜையை ஆரம்பிக்கலாம்.