‌தீபாவ‌ளி: ச‌த்குரு செ‌ய்‌தி

செவ்வாய், 25 அக்டோபர் 2011 (20:09 IST)
தீபாவளிப்பண்டிகை, எதிர்மறை சக்திகள் அழிந்து புத்தொளி பிறப்பதன் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. நம் கலாச்சாரத்தில், வருடத்தில் 365 நாட்களும், ஏதோவொரு காரணத்தோடு பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. காரணத்தைவிட கொண்டாட்டமே முக்கியமாகக் கருதப்பட்டது. உண்மையில் எந்த ஒரு காரணமுமே கூட இல்லாமல் மனிதன் கொண்டாட்டமாக இருக்க வேண்டும். நீங்கள் இப்போது உயிரோடு இருக்கிறீர்கள். இதைவிட வேறென்ன காரணம் உங்களுக்குத் தேவைப்படுகிறது? நீங்கள் வாழும் வாழ்க்கையே ஒரு பெரிய கொண்டாட்டமாக நடக்க வேண்டும்தானே? அதற்காகவே உங்கள் வாழ்க்கையில் பல பண்டிகைகள் உருவாக்கப்பட்டன. அவற்றில் பரவலாக அனைவரும் கொண்டாடுவது தீபாவளி.

ஒரு பண்டிகை என்பது வாழ்க்கையை உற்சாகமான மற்றும் குதூகலமான நிலைக்கு மாற்றும் ஒரு கருவியாக இருக்கிறது. எப்போது நமக்குள் கொண்டாட்டம் இல்லையோ, அப்போது நம் உயிர்த்தன்மையிலும் குதூகலம் இருக்காது. குதூகலமற்ற மனிதர் ஒரு மருந்தில்லாத பட்டாசு மாதிரிதான். தீபாவளி என்பது அந்த ஒரு நாளில் மட்டும் பட்டாசுகளை வெடித்து விட்டு அடங்கி விடுவது அல்ல. தினமும் இதுபோன்று நமக்குள் நடக்கவேண்டும். நாம் நம்முடைய கண்களை மூடும்போதும் திறக்கும் போதும், நம் உயிர்சக்தி, இதயம், மனம் மற்றும் உடல் ஆகியவை வெடித்துவிடும்படியான உற்சாகத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு ஊசிப்போபட்டாசு போலவும் புளித்துப்போன தயிர் சாதம் போலவும் மந்தமாக இருந்தால், உங்களுக்கு தினமும் வெளியேயிருந்து யாராவது சாட்டையடி கொடுத்து உங்களை நகர்த்தத் தேவையிருக்கும்.

எனவே தீபாவளி என்பது அன்று ஒரு நாள் வெளியில் விளக்குகளை ஏற்றி வைத்து அமைதியாகி விடுவதல்ல. வருடம் முழுவதும் உள்ஒளியிலும் திளைக்க என்ன தேவையோ அதை செய்ய வேண்டும் என்பதற்கான நினைவூட்டலே இந்த தீபாவளித் திருநாள். உங்களுக்குள் சேகரித்திருக்கும் இருள் மேகங்களை அகற்றினாலே, அங்கு தானாக உள்ஒளி ஏற்படும். இதற்கான உங்கள் முயற்சிக்கு எப்போதும் நாம் துணையாக இருப்போம்.

அருளும் ஆசிகளும்.

வெப்துனியாவைப் படிக்கவும்