வெறுமைக்குப் பின் தொடர்வது எப்படி? - ரமணர்

செவ்வாய், 1 மார்ச் 2011 (17:10 IST)
கேள்வி: தியானத்தில் ஆழ்ந்திருக்கும் ஓர் கட்டத்தில் பாழ்வெறுமை அல்லது சூன்யம் மட்டுமே மனத்திரையில் தட்டுப்படுகிறது. அதற்குமேல் சாதனையைத் தொடர்வது எப்படி?

ரமணர்: ஒளிக்காட்சிகளோ, ஒலிகளோ, வேறு ஏதேதோ அல்லது வெறும் சூன்ய உணர்வோ எதுவாயினும் அவை யாவற்றினூடேயும் நீங்கள் இருந்து கொண்டுதான் வருகிறீர்கள் இல்லையா? சூன்யத்தை உணர்வதால் "நான் அவ்வாறு உணர்ந்தேன்" என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவ்வாறு உணரும் நான் என்பவர் யார் என்கிற நாட்டத்திலேயே மனத்தைக் குவித்துப் பதிய வைப்பதே ஆரம்பம் முதல் கடைசி வரை நீங்கள் மேற்கொள்ள வேண்டிய ஆன்ம நாட்டம்.

தியானத்தில் சூன்யம் அல்லது வெறுமையே எஞ்சுவதைப் பற்றிய இதே கேள்வியை வேதாந்த நூல்கள் எல்லாவற்றிலும் நீங்கள் காணலாம். காட்சிக் கோலங்களைக் காண்பதும் மனமே. அதுவே அனுபவங்களையும் உணர்த்துகிறது. எதையும் காணாத, உணராத நிலையில் வெறும் சூன்யமே விரிந்திருப்பதாக உணர்வதும் கூட அந்த மனமேயன்றி வேறல்ல. அந்த மனம் உண்மையான நீங்கள் அல்ல. நேர்காட்சியுணர்வு, சூன்யம் இரண்டையுமே வெளிச்சமிட்டுக் காட்டுகிற நிலையான சுயம்பிரகாசமே நீங்கள்.

உதாரணமாக, நாடகம் நடைபெறுகையில் அரங்கமேடை விளக்கொளியில் அரங்கத்தையும், நடிகர்களையும், நாடக நிகழ்ச்சியையும் காண்கிறீர்கள். நாடகம் முடிவுற்றுத் திரை விழுந்த பிறகும் அதே அரங்க விளக்கொளியில் நிகழ்ச்சி முடிந்துவிட்டது என்பதையும் காண்கிறீர்கள் அல்லவா? அதேபோன்றுதான்.

அல்லது வேறொரு உதாரணம் கூறலாம்: சுற்றிலும் உள்ள பொருட்களைக் காண்கிறோம். ஆனால் மையிருளில் அவை புலப்படுவதில்லை என்னும்போது, "நான் எதுவுமே காணவில்லையே" என்கிறோம். அதேபோன்று, நீங்கள் குறிப்பிட்ட சூன்யச் சூழலிலும் கூட நீங்கள் இருக்கத்தான் செய்கிறீர்கள்.

ஸ்தூலப் பொருள், சூட்சுமப் பொருள், தோன்றி மறையும் பொருள் ஆகிய மூன்று பொருட்களுக்கும், சென்ற காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று கால நிலைகளுக்கும் மற்றும் சூன்யத்திற்கும்கூட நீங்கள் சாட்சியாக இருக்கிறீர்கள். தசமன் (பத்தாவது ஆள்) எனும் பழங்கதையில், மொத்தம் எத்தனை பேர் என்று ஒவ்வொருவனும் தன்னை மறந்துவிட்டுத் திரும்பத் திரும்பக் கணக்கெடுத்து, "மொத்தம் ஒன்பது பேர் மட்டும்தானே இருக்கிறோம், ஒருத்தனைக் காணவில்லையே, காணாமற் போனவர் யார்?" என்று திகைத்துத் தடுமாறிது போன்று, சூன்யம் என்ற மனத் திகைப்பு, கதையில் காணமற் போனவனை ஒத்ததே ஆகும்.

'நம்மைச் சுற்றிக் காணப்படுபவை யாவும் சாசுவதமானவையே, 'நாம்' என்பது நமது உடலே' என்பதான எண்ணப் போக்கு நம் மனத்தில் இழைந்து ஊறிப்போயுள்ளதால், ஆன்ம சாதனைப் போக்கில் அவை யாவும் நசித்து மறையும் தருவாயில் நாமும் இல்லாமற்போய் சூன்யமாகிவிட்டதாக எண்ணி பயப்படுகிறோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்