நமக்கு அடிகள் விழுவதற்குக் காரணம் - அன்னை

செவ்வாய், 14 டிசம்பர் 2010 (18:35 IST)
"என் மீது அன்பு கொண்ட பரமனே என்னை அடி. இப்பொழுது நீ என்னை அடிக்கவில்லையானால் உனக்கு என் மீது அன்பு இல்லை என்பதையே அது காட்டும்" - அரவிந்தர்

தெய்வீகப் பூரணத்தை அடைய விரும்பும் அனைவரும் இறைவன் தன்னுடைய எல்லையற்ற அன்பினாலும் அருளினாலும் நமக்குக் கொடுக்கும் அடிகளே நம்மை முன்னேறச் செய்வதற்கு மிக நிச்சயமான, மிக விரைவான வழி என்பதை அறிவார்கள்.

இதற்கு மாறாக சாதாரண மனிதர்கள் எப்பொழுதும் கஷ்டமில்லாத, சுகமான, வெற்றிகரமான வாழ்க்கையைக் கொடுக்கும்படியே இறைவனைக் கேட்பார்கள். தங்களுடைய சொந்த திருப்தி ஒவ்வொன்றிலும் அவர்கள் தெய்வ அருளைக் காண்பார்கள். மாறாக வாழ்க்கையில் துக்கமும் துரதிருஷ்டமும் ஏற்பட்டால் அவர்கள் குறைபட்டுக்கொள்வார்கள். "இறைவா, உனக்கு என் மீது அன்பு இல்லை" என்று சொல்வார்கள்.

இந்த முதிர்ச்சியடையாத, அறிவற்ற மனப்பான்மைக்கு எதிர்மறையாக ஸ்ரீ அரவிந்தர் தெய்வக் காதலனிடம் "அடி, பலமாக அடி, உனக்கு என் மீது எவ்வளவு தீவிரவமான அன்பு உள்ளது என்பதை நான் உணரட்டும்" என்கிறார்.

பல அடிகள் தேவை!

அன்னையே, இறைவனது சக்தியின்றி நானாகவே ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்க முயற்சி செய்யும்போதும், ஏதோ ஒன்று எனக்கு சக்தியிருப்பதாக நம்புகிறது. அப்பொழுது என்ன செய்வது?

ஆம், உண்மை! நேர்மையாக இருப்பது மிகவும் கடினம்... அதனால்தான் அடிமேல் அடி விழுகிறது, சில சமயம் பயங்கரமான அடியாகவும் இருக்கிறது. ஏனென்றால் அது ஒன்றுதான் உன்னுடைய மடமையைத் தகர்க்கிறது. பெரும் நாசங்கள் ஏற்படுவது இதனால்தான். மிகவும் இக்கட்டான நிலைமை ஏங்படும்போதுதான், ஏதாவது உன்னை மிக ஆழமாகப் பாதிக்கும்போதுதான், உன்னுடைய மடமை சிறிது உருகுகிறது. ஆனால், நீ சொல்வது போல், ஏதோ ஒன்று உருகும் போதும், வேறு சிறிதாக ஒன்று இன்னும் உள்ளே இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் நீண்ட காலத்திற்கு அடி தொடர வேண்டியிருக்கிறது.

உனது ஜீவனின் ஆழங்களிலிருந்து நீ ஒன்றுமே இல்லை, உன்னால் ஒன்றுமே செய்ய முடியாது. நீ என்று ஒருவன் இல்லவே இல்லை, இறைவனின் உணர்வும் அருளும் இல்லாமல் தனியாக என்று ஒரு ஆள் இல்லை என்பதை அறிந்துகொள்ள வாழ்க்கையில் எத்தனை அடிகள் தேவைப்படுகின்றன! எப்பொழுது இந்த உண்மையை நீ உணர்ந்து கொள்கிறாயோ அக்கணமே அடிகள் நின்றுவிடும், எல்லாக் கஷ்டங்களும் போய்விடும். ஆனால், முழுமையாக இதை உணர வேண்டும்... உன்னில் எதுவும் இந்த உண்மையை எதிர்த்து நிற்கக் கூடாது... அதற்கு நீண்டகாலம் ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்