தியானம் – முறையும் நோக்கமும்: ஸ்ரீ அன்னை

புதன், 28 செப்டம்பர் 2011 (17:45 IST)
FILE
தியானம் எதற்காக செய்ய வேண்டும்? அதன் நோக்கம் என்ன? எப்படிப்பட்ட மன நிலை அப்போது இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, நம்முள் எழுகின்ற பல்வேறு வினாக்களுக்கு ஸ்ரீ அன்னை அளித்துள்ள பதில்களின் தொகுப்பு இது.

ஒருமுனைப்பு (Concentration) எந்த விளைவையும் நோக்கமாகக் கொண்டதல்ல, ஆனால் எளிமையானதும், விடாப்பிடியானதுமாகும்.

ஒரு குறிப்பிட்ட குறிக்கோள் மீது ஒருமுனைப்படுதல் வளர்ச்சிக்கு துணை செய்கிறது. இலட்சியத்தின் மீது ஒருமுனைப்பட அது மேலும் மலர்ச்சியடைகிறது, அதிகத் தெளிவடைகிறது.

யோகியானவர் பொருட்களுடனும் மனிதர்களுடனும் சக்திகளுடனும் ஐக்கியப்படக்கூடிய திறமையின் மூலம் உண்மைகளை அறிகிறான்.

உணர்வுடன் ஒருமைப்படுவதன் மூலம் மட்டுமே ஞானம் வரும், ஏனெனில் அது ஒன்றே உண்மையான ஞானம் - இருக்கை (existence) தன்னையே உணர்தல் - ஸ்ரீ அரவிந்தர்.

நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுடனும் பொருட்களுடனும் எப்போதுமே உணர்வில்லாத ஒருமைப்படுதல் இருக்கிறது. ஆனால், இச்சா சக்தியின் மூலமும், பயிற்சியின் மூலமும் ஒரு ஆள் மீதோ, ஒரு பொருள் மீதோ ஒருமுனைப்படவும், அதன் மூலம் அந்த ஆளுடன் அல்லது பொருளின் உணர்வுடன் ஒருமைப்படவும் கற்றுக் கொள்ள முடியும். அப்படி ஒருமைப்படும்போது அந்த ஆளுடைய அல்லது பொருளுடைய இயல்பை அறிய முடியும்.

வினா: நீர் எங்களை ஒரு பொருள் மீது தியானம் செய்யச் சொல்லும்போது, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அந்தப் பொருள் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமா?

பதில்: ஒருமுனைப்பட்ட முறையில் உன் சிந்தனையை அதன் மீது செலுத்து.

தியானத்தில் அமரும்போது ஒரு குழந்தையைப் போல கபடில்லாமலும் எளிமையாகவும் இருக்க வேண்டும், உன்னுடைய புற மனத்தின் குறுக்கீடு இருக்கக் கூடாது, எதையும் எதிர்பார்க்கக் கூடாது, வேண்டுமென்று எதையும் வற்புறுத்தக் கூடாது, இந்த நிபந்தனையை நிறைவேற்றிவிட்டால் மற்றவெல்லாம் உனது ஜூவனின் ஆழத்திலுள்ள ஆர்வத்தையே பொறுத்ததாகும். நீ இறைவனை வேண்டினாலும் உனக்குப் பதில் கிடைக்கும்.

ஒவ்வொரு தியானமும் ஒரு புதிய வெளிப்படுதலாக (revelation) இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு தியானத்தின்போதும் புதிதாக ஏதோவொன்று நிகழ்கிறது. வெளிப் பார்வைக்கநீ தியானத்தில் வெற்றி பெறாததுபோல் தோன்றினாலும், நீ உன்னுடைய கீழ்யியல்பின் எதிர்ப்பைவிட அதிகப் பிடிவாதமாக இருந்துவிடாது தியானம் செய்வது நல்லது.

குறிப்பிட்ட நேரங்களில் தியானித்தல் என்று வைத்திருப்பதை விட எப்பொழுதும் ஒருமுனைப்பட்ட, உள்ளாழ்ந்த மனப்பாங்கு இருப்பது அதிக முக்கியமானது.

ஆன்மீக அனுபவம் என்பது தன்னுள் உள்ள இறைவனுடன் தொடர்பு கொள்வது. இந்த அனுபவம் எல்லா நாடுகளிலும், எல்லா மக்களிடையேயும், எல்லாக் காலங்களிலுங் கூட ஒன்றுபோலவே இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்