தான் தானாயிருத்தலே பரமானந்தம் - ரமணர்

செவ்வாய், 4 ஜனவரி 2011 (18:20 IST)
கேள்வி: பகவான் தாங்கள் எப்போதும் முடிவான உயர் நிலையினின்றே எதையும் விளக்கம் அளிக்கிறீர்களே?

ரமணர்: (புன்முறுவலுடன்) என்ன செய்வது! எப்போதும் உள்ள சர்வசாதாரண உண்மையைச் சொன்னால் மக்கள் அதை உணர்வதில்லை. தங்கள் நிஜ சொரூபமே மெய்ம்மை என்பதை அஞ்ஞானத்தால் அசட்டை செய்து கவனியாமல் விட்டுவிடுகிறார்கள். 'தான்' இருப்பதை உணராதவர் உண்டோ? ஆயினும் அதை எடுத்துக் கூறினால் அவ்வுண்மையைக் கேட்பாரில்லை. தன்னைவிட்டு, சுவர்க்கம், நரகம், மறுபிறவி முதலிய இதர விஷயங்களை ஆராய்வதிலேயே பெரும்பாலும் ஆர்வம் கொள்கின்றனர்.

வெட்ட வெளிச்ச உண்மையை நாடுவாரில்லை. விந்தைகள், வாழ்க்கை மர்மம் மீதே நாட்டமெல்லாம். அவர்கள் மனப்பான்மை அப்படியிருந்தால், வேத சாஸ்திரங்களும் அவர்கள் வழியிலேயே சென்று, முடிவில் ஆன்ம சத்தியத்திற்கு அவர்களைத் திருப்ப முனைகின்றன. எங்கெங்கே சுற்றினாலும் முடிவில் தன்னிடமே திருப்பிவர வேண்டும். இப்படி ஊரெல்லாம் சுற்றித் திரியாமல், இப்போதே இக்கணமே தன்னை நாடித் தன்னிலை நின்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

வெளிமுக நாட்டம் நீங்கி மூல சொரூபத்தை உணர்தல் வேண்டும் என்பதே சாஸ்திரங்கள் அனைத்தின் உட்கருத்து. புதிதாய் எதனையும் அடைய வேண்டியதில்லை. அஞ்ஞானம் அகல வேண்டும். விபரீதப் பிரமைகளே ஒழியவேண்டும். அமைதியும் ஆனந்தமும் தன்னைவிட்டு வேறெங்கோ இருப்பதாக எண்ணி அலையாமல், அயலேதுமில்லாத தன் பரிபூரண நிலையில் அமரவேண்டும். தான் தானாயிருத்தலே பரமானந்தம். அவ்வமைதியே ஆனந்தமயம்.

'முக்தி அடைவதற்கு மனத்தை அடக்க வேண்டும்' என்றே எந்த நூலிலும் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால், மனோ சிக்ரமே சாஸ்திரங்களின் முடிவான கருத்து என்று அறிந்துகொண்டபின் நூல்களை அளவின்றி படிப்பதால் பயனில்லை. மனத்தை அடக்குவதற்குத் தன்னை யாரென்று விசாரிக்க வேண்டுமே அல்லாமல் எப்படி நூல்களை விசாரிப்பது.

தன்னைத் தன்னுடைய ஞானக் கண்ணால் தானே அறிய வேண்டும். ராமன் என்பவன் தன்னை ராமன் என்று அறிய நிலைக்கண்ணாடி வேண்டுமா? 'தான்' என்பது பஞ்சகோசங்களுக்குள் இருப்பது. நூல்களோ அவற்றிற்கு வெளியே இருப்பவை. ஆகவே, பஞ்சகோசங்களையும் நீக்கி விசாரிக்க வேண்டிய தன்னை, நூல்களில் விசாரிப்பது வீணே. பந்தத்தில் இருக்கும் தான் யார் என்று விசாரித்து, தன் யதார்த்த சொரூபத்தைத் தெரிந்துகொள்வதே முக்தி. சதா காலமும் மனத்தை ஆன்மாவில் வைத்திருப்பதற்குத்தான் 'ஆன்ம விசாரம்' என்று பெயர். தியானமோ தன்னை சத்-சித்-ஆனந்த பிரும்மமாகப் பாவிப்பது. கற்றவை அனைத்தையும் ஒரு காலத்தில் மறக்க வேண்டிவரும்.

சுருதிகள் இயம்பும் இலக்கணங்களுக்கெல்லாம் இலக்கியப் பொருளாக விளங்கும் ஞானியர்களுக்கு, அச்சுருதிகளால் யாதொரு பிரயோஜனமும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்