சக்திவாய்ந்த உயரதிகாரியை கையாளுவது எப்படி? - சத்குரு

திங்கள், 30 ஏப்ரல் 2012 (16:55 IST)
ஒருவர் உங்களுக்கு உயரதிகாரியாக இருக்கிறார் என்றால், அவர் ஏதோ ஒரு வகையில் உங்களை விட தகுதி பெற்றிருப்பதால்தான் அவர் அங்கு இருக்கிறார். அவரை விட நான் திறமையானவன் என்று கூட உங்களை நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனாலும் அந்த அதிகாரி அந்த பதவிக்கு வருவதற்காக ஏதோ ஒரு தகுதியை, திறமையை, செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் ஏதோ ஊழல் செய்துதான் அந்த‌ப் பதவியை அடைந்திருந்தாலும், குறைந்தபட்சம் ஊழலைப் பயன்படுத்துவதில் அதிகத் திறமையானவராக இருக்கிறார். ஏதோ ஒரு வகையில், சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அவர் திறமையானவராக இருப்பதால்தான் அந்தப் பதவியில் இருக்கிறார்.

WD
அவர் அந்தப் பதவியில் இருப்பதாலும், திறமை மிக்கவர் என்பதாலும், எல்லாவற்றையும் சரியாக செய்வார் என்பதில்லை. நீங்களுமே எல்லாவற்றையும் சரியாக செய்யும் வாய்ப்பில்லை. இந்த உலகத்தில் அப்படிப்பட்டவர் யாருமே இல்லை. அவர் அந்தப் பதவியில் இருப்பதற்குக் காரணம், உங்களை விட அதிக விஷயங்களை அவர் சரியாகச் செய்வார் என்ற எதிர்பார்ப்பிலும் மற்றும் சூழ்நிலைகளைக் கையாள்வதில் உங்களை விட அவர் நன்றாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கலாம்.

ஒரு டைப்பிஸ்ட் மிக நன்றாக டைப் அடிப்பார், ஆனால் அவரது உயரதிகாரிக்கு நன்றாக டைப் அடிக்க வராது. எனவே, இந்த டைப்பிஸ்ட், 'இவருக்கு சரியாக டைப் கூட அடிக்கத் தெரியவில்லை, இவர் எனக்கு உயரதிகாரியா?' என்று கூட நினைக்கலாம். அவர் உங்களுக்கு உயரதிகாரி என்பதால் அவர் உங்களை விட நன்றாக டைப் அடிக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவருக்கு டைப்பிங்கைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் உங்களுக்குத் தெரியாத மற்ற பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பதனால்தான் அவர் உங்களுக்கஉயரதிகாரியாக இருக்கிறார், இல்லையா?

எனவே அவர் உயரதிகாரியாக இருப்பதைப் பற்றிய கேள்வி, அவரது குறிப்பிட்ட சில திறமைகளையும், ஒட்டு மொத்த பார்வையையும் பொறுத்துதான் அமைகிறது; பெரும்பாலான சமயங்களில் ஒரு உயரதிகாரி குறிப்பிட்ட ஏதாவது ஒரு விஷயத்தில் அதிகத் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனாலும் எல்லாவற்றைப் பற்றியும் அவருக்கு ஒரு மேலோட்டமான கண்ணோட்டம் இருக்கிறது. மக்களை ஒன்று சேர்த்து அவர்களிடம் வேலை வாங்கும் திறமை அவரிடம் இருக்கிறது. உங்களிடம் தனிப்பட்ட திறமைகள் இருந்தாலும், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துச் செய்வதில் நீங்கள் திறமை குறைந்தவராக இருக்கலாம். உங்களுக்கு உண்மையிலேயே எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து விஷயங்களை சாதிக்கும் திறமை இருந்தால், இயல்பாகவே, உங்கள் வாழ்க்கையில், இதே நிறுவனத்திலோ அல்லது வேறு ஒரு இடத்திலோ அத்தகைய பதவிக்கு உயர்வீர்கள். உங்களை யாரும் தடுக்க முடியாது, இல்லையா?

ஒ‌ப்‌பிடா‌தீ‌ர்க‌ள்...
யாருடனாவது உங்களை எப்போதும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்காதீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும், எந்தப் பதவியில் இருந்தாலும், யாராவது ஒருவர் கண்டிப்பாக உங்களுக்கும் மேலே இருப்பார்.
எனவே, நீங்கள் ஒரு பதவியில் இருக்கும்போது, உங்கள் உயரதிகாரியைப் பற்றி குறை சொல்லாமல், நீங்கள் இல்லாவிட்டால் உங்கள் உயரதிகாரியும், அலுவலகமும் இயங்க முடியாது என்கிற அளவுக்கு மிக நன்றாக பணியாற்றுங்கள். உங்களை அவர்கள் தவிர்க்க முடியாத அளவுக்கு செய்து விடுங்கள். இப்படி செய்தால், அதிகாரம் தானாக வரும். மாறாக உங்கள் வேலைகளைச் செய்யாமல் குறைசொல்லிக் கொண்டிருந்தால், 'இந்த மனிதன் ஒரு முட்டாள், இவருக்காக நான் ஏன் மெனக்கெட்டு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும்?' என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், உங்களை அந்த நிறுவனமும், உங்கள் உயரதிகாரியும் எப்போது வேண்டுமானாலும் சுலபமாக வெளியேற்றிவிட முடியும். நீங்கள் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது என்ற நிலையை உருவாக்குங்கள். அந்த அளவுக்கு உங்கள் பயன்பாடு இருக்க வேண்டும். அதுதான் வளர்ச்சிக்கு வழி. யாரைப் பற்றியாவது குறை கூறிக் கொண்டிருந்தால், நீங்கள் வளர மாட்டீர்கள்.

உயர்ந்த பதவிகளை அடைந்த மனிதர்கள், யாரைப் பற்றியும் குறை சொல்லி வளரவில்லை. அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டதால்தான் வளர்ந்தார்கள். நாமும் கூட நமது திறமைகளை சிறப்பாகவே வெளிப்படுத்தியிருப்போம். ஆனாலும் அனைவரது திறமையும் ஒரே அளவில் வெளிப்படுவதில்லை. எனவே ஒவ்வொருவரும் அவரது திறமைக்கேற்பவே வளர்வார்கள்.

யாருடனாவது உங்களை எப்போதும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்காதீர்கள். ஏனென்றால் நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுக்கும் மேலே யாராவது ஒருவர் இருந்து கொண்டேதான் இருப்பார். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு பெரிய அளவில் வளர்ந்தாலும், யாராவது ஒருவர் கண்டிப்பாக உங்களுக்கும் மேலே இருப்பார். அதனால் எப்போதுமே உங்களுக்கு ஏதாவது குறை இருந்து கொண்டேதான் இருக்கும். 'இந்த மனிதர் என்னளவுக்கு திறமையானவராக இல்லாவிட்டாலும், எப்படி என்னை விட உயர்ந்த நிலையில் இருக்கிறார்' என்று சிந்தித்துக் கொண்டேதான் இருப்பீர்கள். அதனால் எங்கிருந்தாலும், மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள்.

அந்தந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு நூறு சதவீதம் செயல் புரிந்தால், உங்கள் நிறுவனத்துக்கும், உயரதிகாரிக்கும், அந்த‌ச் சூழ்நிலைக்கும் நீங்கள் தவிர்க்க முடியாதவர் ஆகிவிடுவீர்கள். இதனால் நீங்களும் வளர முடியும். இப்போதிருக்கும் அதிகாரியைவிட நீங்கள் அதிகத் திறமையை வெளிப்படுத்தினால், எப்படியும் உங்கள் நிறுவனம் உங்களை அந்த இடத்திற்கு நியமிப்பார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்