உனக்குள்ளேயே விலகி நில் - அன்னை

புதன், 20 ஏப்ரல் 2011 (13:51 IST)
உங்களில் மிகப் பெரும்பாலோர் உங்களுடைய ஜீவனின் மேற்பரப்பிலேயே வாழ்கிறீர்கள். அதனால் புறச் செல்வாக்குகள் உங்களைத் தீண்டுவதற்கு இடமளிக்கிறீர்கள். நீங்கள் உங்கள் உடலுக்கு வெளியே வாழ்வதுபோல் அவ்வளவு வெளிப்புறத்தில் வாழ்கிறீர்கள். அவ்வாறு புறத்தில் வாழும் விரும்பத்தகாத இன்னொரு ஜீவனைச் சந்திக்கும்போது கலவரமடைகிறீர்கள்.

நீ எப்பொழுதும் உனக்குள்ளேயே விலகி நிற்க வேண்டும். உன்னுள்ளேயே ஆழ்ந்து செல்லக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி விலகி நின்றாயானால், நீ பத்திரமாயிருப்பாய். வெளி உலகில் இயங்கிக் கொணடிருக்கும் மேலெழுந்தவாரியான சக்திகள் உன்னைப் பயன்படுத்த இடம் கொடாதே. அவசரத்தில் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியதிருக்கும் போது கூட சிறிது நேரம் விலகி நின்றால் எவ்வளவு குறைந்த நேரத்திலும் அதிக வெற்றிகரமாகவும் உங்களுடைய வேலையைச் செய்ய முடியும் என்பதைக்கண்டு ஆச்சரியப்படுவாய்.

யாராவது உன் மீது கோபப்பட்டால் அவனுடைய கோப அதிர்வுகளில் அகப்பட்டுக் கொள்ளாமல் விலகி நில். எந்த ஆதரவோ பதிலோ கிடைக்காததால் அவனுடைய கோபம் மறைந்து போகும், எப்பொழுதும் அமைதியுடன் இரு. அமைதி இழக்கும்படியான சோதனைகளையெல்லாம் எதிர்த்து நில். விலகி நிற்காமல் எதையும் முடிவு செய்யாதே, விலகி நிற்காமல் ஒருபோதும் ஒரு வார்த்தையும் பேசாதே, விலகி நிற்காமல் ஒருபோதும் செயலில் குதிக்காதே.

சாதாரண உலகைச் சேர்ந்த எல்லாமே நிலையற்றவை, சொற்ப காலத்திற்கே இருப்பவை, ஆகவே கலவரப்படும்படியாக அதில் ஒன்றுமே இல்லை. எது நிலைத்து நிற்பதோ, எது நித்தியமானதோ, எது அமரத்தன்மை கொண்டதோ, எது அனந்தமானதோ அதுவே வென்று பெறுவதற்கு, உடைமையாக்கிக் கொள்வதற்கு, தகுதியுடையதாகும். அதுவே தெய்வ ஒளி, தெய்வ அன்பு, தெய்வ வாழ்வு - அதுவே பரம சாந்திர, பூரண மகிழ்ச்சி, புவி மீது அனைத்தின் மீதும் ஆட்சி செலுத்துதல், அதன் சிகரம் இறைவனின் முழு வெளிப்பாடு.

இதை நீ உணர்ந்துவிட்டால் எது நிகழ்ந்தபோதிலும் நீ விலகி நின்று அதை நோக்க முடியும், நீ அமைதியுடனிருநூது தெய்வ சக்தியை அழைத்து, அதன் பதிலுக்குக் காத்திருக்க முடியும். அப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்று உனக்குத் திட்டவட்டமாகத் தெரியும். ஆகவே, இதை நீ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீ மிகவும் அமைதியாக இருந்தாலன்றி இறைவனின் பதிலைப் பெறமுடியாது. இந்த உள் அமைதியைப் பழகு, சிறிய அளவிலாவது தொடங்கி, தொடர்ந்து பழகி வா, பிறகு அதுவே உனக்கு வழக்கமாகிவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்