ஆன்ம விசாரணை - ரமணர்

திங்கள், 14 பிப்ரவரி 2011 (17:29 IST)
மனம் அடங்குவதற்கு விசாரணையைத் தவிர வேறு தகுந்த உபாயங்கள் இல்லை. மற்ற உபாயங்களை மேற்கொண்டு அடக்கினால் மனம் அப்போதைக்கு அடங்கினாற்போல் இருந்து, மறுபடியும் கிளம்பிவிடும்.

இதுவே நேர்வழி. மற்றவையெல்லாம் அகந்தையை வைத்துக்கொண்டே செயல்படும் சாதனைகள். அவ்வழிகளில் பல சந்தேகங்கள் எழும், முடிவில் யாரும், 'தான் யார்?' என்று பார்த்தே ஆகவேண்டும். ஆன்ம விசாரணையிலோ, முடிவிற் கேட்டுத் தெளியவேண்டிய 'நான் யார்?' என்னும் ஒரே கேள்வியே ஆரம்பம் முதல் கேட்கப்படுகிறது. இவ்வழியைப் பின்பற்றுவோர்க்கு வேறெந்த ஊன்றுகோலோ துணையோ தேயைவில்லை.

ஆன்ம சத்தியம் விளங்க, அதை மறைத்துக் கொண்டிருக்கும் அனர்த்ம இடையூறுகளை விசாரணையால் விலக்கியே தீரவேண்டும். முடிவில், தோன்றி மறையும் அகந்தையும் விலக்கப் பெறுங்கால், சத்தியம் தடையின்றிப் பிரகாசிக்கும். அது இயல்பாகவே தானே தானாய் என்றும் ஒளிர்வது என்பதை உணர்வோம்.

தியானிப்பதற்கு தனக்கு அன்னியமான ஓர் புறப்பொருள் அவசியமாயிருக்கிறது. ஆன்ம விசாரணையிலோ தானும் தான் அல்லாததுமான (அறிவும் அறிபடுபொருளுமான) ஒருமை நிலையைத் தவிர வேறு புறப்பொருள் கிடையாது. தியானத்திற்கும் ஆன்ம விசாரணைக்கும் வித்தியாசம் இதுவே.

ஆன்ம விசாரம் ஒன்றைத் தவிர மற்ற எவ்வித சாதனத்திலும் சாதனத்தை நடத்தும் பொருட்டு மனம் என்று ஒன்று இருந்தே ஆகவேண்டும். மனமின்றி அந்த சாதனையை நடத்துவதெப்படி? ஒருவர் சாதனத்தில் ஈடுபடும் போது அகந்தை பற்பல சூட்சுமமான உருவம் கொள்ளும். ஆனால் அது மட்டும் அழிவதில்லை. ஆத்ம விசாரத்தைத் தவிர மற்ற சாதனங்களால் அகந்தையை அழிக்க முயல்வது, திருடனே திருடனாகிய தன்னைப் பிடிக்கப் போலீஸ்காரன் ஆவது போலத்தான்! ஆன்ம விசாரத்தினால் மட்டுமே அகந்தையோ மனமோ உண்மையில் இல்லை, என்னும் சத்தியத்தை வெளிப்படுத்திக் கைவல்யமான ஆன்மாவின் சுத்த நிர்விசேஷ ஸ்திதியை உணரச் செய்ய முடியும்.

மனோநாசத்திற்கு மனத்தையே ஏவிவிடுவது, திருடனையே போலீஸ்காரனாக்குவதற்கு ஒப்பானது! அந்தத் திருட்டுப் போலீஸ்காரன் உங்களோடுகூட வீராப்புடன் வருவான், திருடனைப் பிடிப்பதுபோல் பாசாங்கு செய்வான், முடிவில் பலன் இராது. ஆகவேதான், உள்முகமாக நாட்டத்தைச் செலுத்தி, மனம் என்பது எங்கிருந்து எழுகிறது என்று விசாரிக்கப் போனால், அது இருக்குமிடம் தெரியாமல் மறைந்துபோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்