ஆண்-பெண் ஈர்ப்பு சரியா? தவறா?

செவ்வாய், 24 ஜூலை 2012 (20:28 IST)
கேள்வி: “ஓர் ஆணுக்குப் பெண்ணிடத்திலும், பெண்ணுக்கு ஆணிடத்திலும் வரும் ஈர்ப்பு நல்லதா, கெட்டதா? நல்லது எனில் எந்தவிதத்தில்? கெட்டது என்றால், ஏன்?

WD
சத்குரு: மேற்கில் ஆண் பெண் உறவுகளைச் சுதந்திரமாக வைத்துக்கொண்டால், வாழ்க்கை சுதந்திரமாக அமையும் என்று கணக்கு போட்டார்கள். இளம் வயதில் அது பிரமாதமாக வேலை செய்தது. ஆனால் வயது ஏற ஏற போதிய பாதுகாப்பு இல்லையோ என்ற உணர்வு அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.

பந்தம் இல்லை, குடும்பம் இல்லை, உறவில் எந்த உறுதியும் இல்லையென்றாகிப் போனதால், ஒரு தலைமுறையே அநாதைகளாக வளர்ந்து நிற்கும் அவலம் அங்கே காணப்படுகிறது. சமூகத்தில் பெரும்பகுதியே மனரீதியாகப் பின்னமாகிவிட்டது.

பொறுப்பு ஏற்காமல் விளையாட்டுத்தனமாக எதில் ஈடுபட்டாலும், விளைவு இப்படித்தான் இருக்கும். இளமைக் காலத்தில் உங்கள் சுகங்களில் பெரும் பகுதியைத் தீர்மானிக்கும் இதே உடல் வெகுகாலம் அதே நிலையில் தங்காது. இனக்கவர்ச்சி, இளமையில் முக்கியமானதோ, இல்லையோ, இளமைப் பருவத்தில் மற்றவற்றைவிட அது முன்னிலையில் பிரதானமாய் இருப்பதை மறுக்க முடியாது.

நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இயற்கை அப்படித்தான் அமைத்திருக்கிறது. அதை நல்லது என்றோ கெட்டது என்றோ ஏன் முத்திரை குத்த வேண்டும்? அதில் சுகம் என்று முழுவதுமாக ஆழ்ந்து போனாலும், சிக்கிக் கொள்வீர்கள். தப்பு என்று தவிர்க்கப் பார்த்தாலும் அதனுடன் ஒட்டிக் கொண்டு விடுவீர்கள்.

வாழ்க்கைக்குத் தேவையான அளவோடு அதை நிறுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். அதைக் கடந்து போக முடிந்தால் அற்புதம்!

வெப்துனியாவைப் படிக்கவும்