பகவானும் பக்தர்களும் - ராமகிருஷ்ணர்

செவ்வாய், 29 மே 2012 (20:03 IST)
பகவானும் பக்தர்களும்!

ஜமீன்தார் ஒருவர் மிகப் பணக்காரராக இருக்கலாம் என்றாலும் ஏழைக் குடியானவன் ஒருவன் ஏதேனும் அற்பமானதொரு காணிக்கைப் பொருளைப் பிரியத்துடன் கொண்டுவந்தால், அவர் மிகுந்த சந்தோஷத்துடன் அதனை ஏற்றுக் கொள்கிறார். அதுபோல சர்வேசுவரன் மிகப் பெரியவனும் சக்திமானுமான போதிலும் பக்தியோடு சமர்ப்பிக்கப்படும் அற்ப நிவேதனத்தையும் அத்தியந்த சந்தோஷத்துடனும் திருப்தியுடனும் அங்கீகரிக்கிறான்.

அவனை அறிந்தால் அதுவே எனக்குப் போதுமானது. எனக்கு சமஸ்கிருத மொழி தெரியாமல் போனால் என்ன? பண்டிதன் பாமரன் எவராயிருந்தாலும், உள்ளமுருகி பகவானை வேண்டுவார்களானால் பகவானுடைய குழந்தைகளாகிய அவர்கள் ஒவ்வொருவருர் மீதும் அவர் கருணை மழையைப் பொழிகின்றார். ஒருவனுக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றன. சில‌ர் அப்பா என்றழைக்கின்றன; சில‌ர் முழுதும் உச்சரிக்க முடியாது "பா" என்று அரை குறையாக உச்சரித்து அழைக்கின்றன‌ர். தன்னைச் சரியாகக் கூப்பிடவில்லையென்று எண்ணித் தகப்பன் இளம் குழந்தைகளிடம் குறைவான அன்பு காட்டுவானா? அவைகள் சிறு குழந்தைகள்; ஆகையால் சரிவர அவைகளால் பேச முடியாது என்று அவனுக்கு நன்கு தெரியும். எனவே, எல்லாக் குழந்தைகளையும் ஒரே விதமாகவே அவன் விரும்புகிறான்.

மண்ணாலும் புழுதியாலும் தன்னை அழுக்காக்கிக் கொள்வது குழந்தையின் சுபாவம். என்றாலும், அதன் தாயார் அதை எப்போதும் அழுக்குடம்பாகவே இருக்கும்படி விடுவதில்லை. அடிக்கடி அவள் அக்குழந்தையைக் குளிப்பாட்டுகிறாள். அதுபோல் பாவம் செய்வது மனிதனுடைய சுபாவம். மனிதன் பாவம் செய்யும் சுபாவமுடையவன் என்பது உண்மையேயானாலும், அவனுடைய கதிமோட்சத்துக்கு ஈசுவரன் ஒரு வழிவிடுகிறார் என்பது அதைவிட பன்மடங்கு உண்மையாகும்.

ஒரே மீன் பல்வேறு விதமாகச் சமைக்கப்பட்டு ஒவ்வொருவனுடைய ருசிக்குத் தகுந்த உணவாவதைப்போல், ஒரே மூர்த்தியான சர்வேசுவரன் பக்தர்களுடைய பல்வேறு விருப்பத்திற்கேற்ப வேறு வேறு உருவங்களில் தோன்றுகிறான். ஒவ்வொரு பக்தனும் தான் கொண்டாடும் மூர்த்தியைத் தான் தரிசிக்கிறான். ஈசுவரன் சிலர்க்குத் தயாளுவான எஜமானனாகவும், சிலருக்கு பிரிய பிதாவாயும், சிலருக்குப் புன்னகை புரியும் மாதாவாயும், சிலருக்கு அன்புமிகுந்த துணைவனாயும், சிலர்க்கு அந்தரங்கக் கணவனாயும், சிலர்க்குக் கீழ்ப்படியும் புத்திரனாயும் இருக்கிறான்.

வெப்துனியாவைப் படிக்கவும்