மூன்றாவதுபடை வீடு - பழனி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன.

பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது.

இத்தலம் "பழனி" என அழைக்கப்படுவதன் காரணம், சிவனும், பார்வதியும் தம் இளைய மைந்தன் முருகப்பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப் பெற்றுப் பின்னர் பழனி என மருவியதே என்பர்.

இந்த திருத்தலத்தை திரு-என்ற இலக்குமி தேவியும், ஆ-என்ற காமதேனுவும், இனன்-என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் "திரு ஆ இனன் குடி" என்று பெயர் பெற்றது.

திரு - லட்சுமி
ஆ - காமதேன
இனன் - சூரியன
கு - பூமாதேவி
டி - அக்கினிதேவன

இந்த ஐவரும் முருகனை பூசித்தமையால் இந்த ஸ்தலத்திற்கு "திருவாவினன் குடி" என்று ஆயிற்று என்றும் கூறப்படுகிறது.

அமைவிடம் :

மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மூன்று தென் மாவட்ட நகரங்களுக்கு மையமாக பழனி விளங்குகிறது. இக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தின் கீழ் வருகிறது. திண்டுக்கல்-கோயம்புத்தூர் ரயில் பாதையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது.

இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளது. கடைச்சங்ககாலத்தில் பழனி - பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும், பழனி என்ற பெயரே நாளடைவில் பொதினி என்று ஆகிவிட்டதாகவும் அகநானூறு கூறுகிறது.

மலையின் மகிமை :

பழனிமலை பக்தி மணக்கும் மலை. முருகக் கனி நின்று அருள் சுரக்கும் மலை. சித்தர்கள் செந்நெறி கண்ட மலை. ஞானமும் கருணையும் தென்றலாய் வீசும் ஞான பண்டிதனின் மலை. அஞ்சேல் என்று அபயம் தரும் பஞ்சாமிர்த மலை. திரு நீறு மணக்கும் மலை. தீவினைகள் அகற்றும் மலை. பால் அபிஷேகமும் பஞ்சாமிர்த அபிஷேகமும் அருவிபோல ஓடும் அருள் மலை. அறத்தை நிலை நாட்டவும், தண்டனிட்டோர் துயர் தீர்க்கவும் தண்டு ஏந்திய தண்டாயுதபாணி கோயில் கொண்ட மலை.

திருவாவினன்குடி கோயிலுக்கு அருகில், முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும், கோயிலில் உள்ள மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி முதலியவர்களின் சன்னதிகளும், சித்திரங்களும் இவ்வரலாற்றை விளக்குகின்றன.

கயிலையில் முருகப்பெருமானைப் பிரிந்த சிவனும், உமாதேவியும் வருந்தினர். இறைவனைக் குறிக்கும் "சச்சிதானந்தம்" என்ற பெயரில் வருகின்ற "சத்" என்னும் பதம் சிவபெருமானையும், "சித்" என்னும் பதம் பார்வதி தேவியையும், "ஆனந்தம்" என்னும் பதம் முருகப்பெருமானையும் குறிக்கும்.

பழம் நீ - பழனி :

முருகனைப் பிரிந்த துயர் தாளாத சிவபெருமானும், உமாதேவியும், முருகனைப் பின் தொடர்ந்து திருவாவினன் குடிக்கு வந்து "பழம் நீ" என்று முருகனுக்குச் சூட்டிய திருப்பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று பழனி ஸ்தல புராணம் கூறுகிறது.

பழனி மலைமேல் உள்ள கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய சிற்பங்கள் பழத்திற்காக உலகை வலம் வந்த போட்டியையும், மலைமேல் முருகப்பெருமான் சன்னதிக்குத் தென்பாகமாக காணப்படும் கைலாசநாதர் ஆலயம் இறைவனும் இறைவியும் முருகனைப் பின் தொடர்ந்து வந்து சமாதானம் செய்ததையும் உணர்த்துகின்றன.

முருகனின் திருவிளையாடல் :

பொதிகை மலையில் வந்து தங்கிய அகஸ்திய முனிவர் தன் சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று அங்கு முருகனுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார். இடும்பாசுரன் சிறந்த பக்திமானாக இருந்தபடியினால், அகஸ்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடியாகக் கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான். முருகன் இதில் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்