மழை மலைத் தாய்

காஞ்சி மாவட்டத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அச்சிறுபாக்கம் பள்ளிப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பசுமையான மலைக்குன்றில் அமைந்துள்ளது மழை மலைத் தாயின் புனித அருள் தலம். இத் திருமலை நல்லாயன் குன்று என்றும் அழைக்கப்படுகிறது.

1960 க்கும் 70க்கும் இடையிலான காலம் தமிழகத்தில் புயல், வறட்சி போன்ற இயற்கை அழிவுகள் நிகழ்ந்தது.

1964 ம் ஆண்டில் வீசியடித்த புயலில் பாம்பன் பாலம், அதன் மீது பயணிகளுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு ரெயிலுடன் கடலில் அடித்து செல்லப்பட்டது.

இந்த புயல் காரணமாக கடல் கொந்தளித்து கரையேறி தனுஷ்கோடி கடலில் மூழ்கி பெரும் சேதம் உண்டாயிற்று.

1966 ம் ஆண்டு நவம்பரில் ஒரு புயல் சென்னையில் பெரும் சேதம் ஏற்படுத்தியது.

ஒன்றன் பின் ஒன்றாக தமிழகத்தை புயல்கள் தாக்கியதோடு மட்டுமல்லாமல் 1967 முதல் 1969 வரை தமிழகத்தை கடும் வறட்சி பாதித்தது.

அப்போது அருட்தந்தை புஷ்பம் அடிகளார் மரி அன்னையின் திருஉருவத்தை ஒரு தேரில் வைத்து அச்சிறுபாக்கம் பங்கு ஆலயமான புனித சூசையப்பர் ஆலயத்திலிருந்து 65 கி.மீ. தொலைவு வரை மழை வேண்டி ஜெபித்துக்கொண்டு பொதுமக்கள் புடைசூழ எடுத்துச் சென்றார்.

தேர் புறப்பட்ட 9-ம் நாள் மறுபடியும் ஆலயத்தை வந்தடைந்தவுடன் மக்களின் மனம் குளிரும் வண்ணம் பெருமழை பெய்தது.


இதைக் கண்ட மக்கள் திரளாகக் கூடி நின்று மழையைக் கொடுத்த "மழை மாதாவே" என்று குரலெழுப்பி மகிழ்ந்தனர்.


மலையில் வீற்றிருந்து மழையைத் தந்த அன்னைக்கு "மழை மலை மாதா" என்று பெயரிட்டு மக்கள் அன்றிலிருந்து வழிபட ஆரம்பித்தனர்.

இங்கு பல்வேறு சமூகப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. உடல் ஊனமுற்றோருக்காக அமைக்கப்பட்டுள்ள இல்லவாசிகள் அருட்தலத்தில் பல பணிகளைச் செய்து ஊதியம் பெற்று தன்மானத்தோடு வாழ்கின்றனர்.

திருவிழாக்காலங்களில் ஏழைகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு திருமாங்கல்யம் நன்கொடையாக அளிக்கப்படுகிறது.

இது தவிர பல்வேறு நலத்திட்ட உதவிகளும், ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதியும் வழங்கப்படுகின்றன. அன்னையின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக "மாதந்தோறும் மலையருள்" என்று மாத இதழும் வெளியிடப்படுகின்றது.

நம்பிக்கையோடு அன்னையிடம் வேண்டினால் வெகுநாட்களாக திருமணமாகாதவர்களுக்குத் திருமணமும், திருமணமாகிப் பல ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறும் அருள்ப்படுகிறது என்று மக்கள் நம்புகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்