நவராத்திரி வழிபாடு - சில சுவாரஸ்யங்கள்

திங்கள், 7 அக்டோபர் 2013 (13:34 IST)
FILE
நவராத்திரி வழிபாடு மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லஷ்மி, துர்கை என்ற மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே ஆகும்.

வீட்டில் இருக்கும் அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான இந்த விசேஷத்தில், முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலஷ்மியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.

அழகுப் பொலிவுடன் திகழும் கொலு மண்டபத்தை அமைத்து முறைப்படி கும்பத்தை ஸ்தாபித்து,சந்திர குப்பத்தை தனியாக வைக்காமல் சக்தி கும்பத்தை மண்குடத்தில் வைத்து சுற்றிவர மண்பரப்பி அதிலே நவதானியங்களிட்டு முளைக்கவிடுவது பல இடங்களில் வழக்கமாக உள்ளது. இந்த நவதானியங்களின் செழிப்பைத் தமது குடும்பவளத்தின் நன்மை தீமைகளை அறியும் சகுனமாகக் கொள்வர்.

FILE
வீடுகளில் கொலுவைத்தல் நவராத்திரியின் விசேஷ அம்சமாகும். படிப்படியாக அமைக்கப்பட்ட விசேஷமான பீடங்களில் அல்லது மாடிப்படிகளில் விதவிதமான பொம்மைகள் வைத்து இக் கொலு அலங்கரிக்கப்படுகிறது. 5, 7 என்ற ஒற்றைப்படையாகப் படிகளின் எண்ணிக்கையை வைத்து கொலு அமைக்கப்படுகிறது. அருகிலேயே கும்பம் வைத்து சுவாமிப்படங்களையும் மாட்டி அணையா விளக்குகள் ஏற்றி ஒன்பது நாட்களும் விதவிதமான பட்சணங்களை நைவேந்தியம் செய்து பூஜிப்பது முறை.

சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.

நவராத்திரி என்றாலே நினைவிற்கு வரும் சுண்டல் வகைகளும், இந்த பண்டிகை கால நேரங்களில் விசேஷமாக உள்ளது. வீட்டிற்கு வருபவர்களுக்கு விதவிதமான சுண்டல், இனிப்பு பலகாரங்களை கொடுத்து, அவர்களை பாடவைத்து அனைவரும் மகிழ்ச்சியை பரப்பும் இந்த நவராத்திரி உங்கள் குடும்பத்தில் அனைத்து நலன்களையும் கொண்டுசேர்க்க எங்களது வாழ்த்துக்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்