சென்னையில் ஹெல்மெட் அணிந்து சென்ற இளைஞர் லாரி மோதி பலி

புதன், 1 ஜூலை 2015 (22:42 IST)
சென்னையில், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டிய இளைஞர் மீது, லாரி மோதி, சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் துடிதுடித்து பலியானார்.
 

 
சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (22). இவர் இன்று காலை தனது பைக்கில் வழக்கம் போல் வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர், வேளச்சேரி மெயின் ரோட்டில் நீச்சல் குளம் அருகே சென்ற போது, பின்னால் அசுர வேகத்தில் வந்த தண்ணீர் லாரி ஒன்று, அந்த பைக் மீது மோதியது. இதில் செல்வகுமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானர்.
 
இது குறித்துத் தகவல் அறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வுத் துறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான செல்வகுமாரின் உடலை மீட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் திருவொற்றியூரைச் சேர்ந்த கணேசன் (42) கிண்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
 
சாலை விபத்துக்களில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஹெல்மெட் அவசியம் எனத் தற்போது தான் சென்னை உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் உத்தரவிட்டு, அதை இன்று முதல் அமுல்படுத்தியது. இந்த நிலையில்தான் ஹெல்மெட் அணிந்து சென்ற இளைஞர் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்