காதலை ஏற்றுக்கொள்ளாத தாய், தந்தை, சகோதரியை கொலை செய்த வாலிபர்

செவ்வாய், 29 நவம்பர் 2016 (16:10 IST)
தன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், தங்கை மற்றும் தந்தையை வாலிபர் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
திருப்பத்தூருக்கு அருகில் உள்ள காக்கங்கரை என்ற ஊரில் வசிப்பவர் மோகன்(55). இவர் மின்வாரிய அதிகாரியாக பணி புரிந்து வந்தார். இவரின் மனைவி ராஜேஸ்வரி(43), மகள் சுகன்யா(24). மகன் தமிழரசன் (27)
 
இந்நிலையில், மோகன், ராஜேஸ்வரி, சுகன்யா ஆகிய மூவரும், வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு நேற்று பிணமாக கிடந்தனர். தமிழரசன் மட்டும் மார்பில் காயத்தோடு மயங்கி கிடந்தார். பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், அங்கு விரைந்த போலீசார் தமிழரசனை மருத்துவமனையில் அனுமதித்தனர். 
 
முகமூடி அணிந்த சிலர் தன் வீட்டிற்கு வந்து தனது தாய், தந்தை, சகோதரி ஆகியோரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி விட்டதாக தமிழரசன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.
 
எனவே, கொலையின் பிண்ணனி குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். எந்த துப்பும் கிடைக்காத நிலையில், அவர்களுக்கு தமிழரசனின் மீது சந்தேகம் ஏற்பட்டது. மீண்டும் அவரிடம் விசாரணை செய்த போது, அவர் முன்னுக்குப் பின் பேசியதால், அவர் மீது சந்தேகம் வலுத்தது.
 
இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 
 
தமிழரசன் டிப்ளமோ படித்து விட்டு, ஒசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது தங்கை சுகன்யா, என்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை செய்து வருகிறார்.
 
இந்நிலையில், ஓசூரில் தன்னுடன் பணிபுரியும் ஒரு பெண்ணை தமிழரசன் காதலித்துள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு பண உதவிகளையும் செய்து வந்தார். இது அவரது தங்கை சுகன்யாவிற்கு தெரிய வர, அதை தாய் மற்றும் தந்தையிடம் ராஜேஸ்வரியிடம் தெரிவித்து விட்டார்.
 
சம்பவத்தன்று, வீட்டில் ராஜேஸ்வரி மற்றும் சுகன்யா இருந்துள்ளனர். தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளுமாறு தாயிடம், தமிழரசன் மன்றாடியுள்ளார். ஆனால், அந்த பெண் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், அவரின் காதலை ராஜேஸ்வரி ஏற்கவில்லை. மேலும், அந்த பெண்ணை மறந்துவிடுமாறு தமிழரசினிடம் கூறியுள்ளார். தமிழரசன் எவ்வளவு கெஞ்சியும், அவர் மறுத்துவிட்டார்.  
 
இதனால் கோபமடைந்த தமிழரசன் தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இடையே, அவரது தங்கையும் அவருடன் சண்டை போட, ஏற்கனவே தனது காதல் விவகாரத்தை தாயிடம் கூறிய, சுகன்யா மீது கோபத்தில் இருந்த தமிழரசன், அவரால்தான் தனது காதல் கை கூடாமல் போய்விட்டது என்று எண்ணி கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.
 
அதன் காரணமாக வீட்டிலிருந்த கத்தியை எடுத்து, தாயின் கண் முன்னாலேயே, சுகன்யாவை கொஞ்சமும் இரக்கமின்றி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். மேலும், தடுக்க வந்த தாய் ராஜேஸ்வரியையும், கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். 
 
அதன்பின், இந்த கொலைகளிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என திட்டமிட்டார். அவரின் காதல் விவகாரம் தெரிந்து, மிச்சமிருப்பது அவரின் தந்தை மோகன் மட்டும்தான். எனவே, அவரையும் கொலை செய்ய தமிழரசன் முடிவெடுத்தார். இரவு பணிக்கு சென்று விட்டு, அதிகாலை வீடு திரும்பிய தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
 
மேலும், தன் மீது சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக, தனது மார்பில் கத்தியால் கீறி காயத்தை ஏற்படுத்திக் கொண்டு, தனது குடும்பத்தை மர்ம நபர்கள் கொலை செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. 
 
இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
குடும்பத்தில் உள்ள அனைவரும் கொலை செய்யப்பட்ட விவகாரம் இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்