திறமை வாய்ந்த இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்க புதிய அமைப்பு: ப. சிதம்பரம் அறிவிப்பு

சனி, 1 நவம்பர் 2014 (15:14 IST)
இளம் எழுத்தாளர்களின் முதல் இலக்கிய நூலை இலவசமாக வெளியிடவே 'எழுத்து' என்ற தமிழ் இலக்கிய அமைப்பைத் தொடங்குவதாக மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ப. சிதம்பரம் கூறியது:-
 
தமிழில் புதிய நூல்கள் வெளிவருவது குறைந்து கொண்டே வருகிறது. திறமை வாய்ந்த இளம் படைப்பாளிகள் தங்களது முதல் நூலை வெளியிட முடியாத நிலையில் உள்ளனர்.
 
தமிழகத்தில் சுமார் 6.5 கோடி பேரும், உலகெங்கும் சுமார் 7.5 கோடி பேரும் தமிழ் பேச, படிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர். ஆனால், தமிழில் வெளியாகும் நூல்கள் 1,000 பிரதிகள்கூட விற்பதில்லை. அரசு நூலகங்களுக்குப் புத்தகங்களை விற்பதிலும் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
 
கவலை அளிக்கும் இந்த நிலையை மாற்ற, எழுத்து என்ற தமிழ் இலக்கிய அமைப்பைத் தொடங்குகிறோம். இதற்கான தொடக்க விழா, நவம்பர் 3 ஆம் தேதி சென்னை ஆழ்வார்ப்பேட்டை எம்.சிடி.எம். சிதம்பரம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சிவகாமி பெத்தாச்சி கலையரங்கில் நடைபெறவுள்ளது.
 
தமிழறிஞர் அவ்வை நடராசன், கவிஞர்கள் வைரமுத்து, மு. மேத்தா, மரபின்மைந்தன் முத்தையா ஆகியோர் இந்த அமைப்பின் அறங்காவலர்களாகச் செயல்படுவார்கள்.
 
இளம் எழுத்தாளர்களின் முதல் நாவல், கவிதை, சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டு அவற்றை விற்பனை செய்யும் பணியை எழுத்து அமைப்பு மேற்கொள்ளும். வெளியிடுவதற்கான நூல்களை சிறந்த இலக்கிய வாதிகளைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும் இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.
 
மேலும், தன்னைக் கவர்ந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் என்று கூறிய சிதம்பரம், ஜெயகாந்தன் தமிழகத்தின் சொத்து என்று கூறினார்.
 
முன்னதாக அரசியல் தொடர்பான எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம் என்று ப. சிதம்பரம் வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்